Published : 31 Mar 2025 12:49 PM
Last Updated : 31 Mar 2025 12:49 PM

“அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவில் இருந்து ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கும்” - சஞ்சய் ராவத்

ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.

மும்பை: "பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யும், அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பார்" என்று உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகம் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் நடக்கும். தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன.

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றார். எனக்குத் தெரிந்தவரை, அவர் 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார்” என்று தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "2029-ஆம் ஆண்டிலும் (அடுத்த மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஆண்டு) நரேந்திர மோடியையே பிரதமராக நாடு பார்க்கிறது. அதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமையகத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவருக்கும், ஆர்எஸ்எஸ்-ன் இரண்டாம் சர்சங்கசாலக் மாதவ சதாசிவ கோல்வால்கருக்கும் அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, "100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட சித்தாந்தத்தின் விதை, இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்துள்ளது. கொள்கைகள் மற்றும் மதிப்புகள் இந்த மரத்திற்கு உயர்ந்த உயரத்தை அளித்துள்ளன. லட்சக்கணக்கான கரசேவகர்கள் இந்த மரத்தின் கிளைகளாக உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்" என்று நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி 75 வயதை எட்டுகிறார். 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள், இளைய தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்பது பாஜகவில் எழுதப்படாத விதியாக உள்ளது. சஞ்சய் ராவத்தின் கருத்து இதை ஒட்டியே உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், எடியூரப்பா போன்ற சிலர் விதிவிலக்குகளாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x