Published : 31 Mar 2025 06:10 AM
Last Updated : 31 Mar 2025 06:10 AM
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்துக்கு பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாக்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மோடி பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு நேற்று சென்றார். அப்போது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிரதமரை அன்புடன் வரவேற்றார்.
பின்னர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஸ்மிருதி மந்திரில் உள்ள அந்த அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, இந்தியாவின் அழியாத கலாச்சாரத்தின் ஆலமரம் இந்த ஆர்எஸ்எஸ் சங்கம் என்று கூறினார்.
முன்பு அடல் பிஹாரி வாஜ்பாய் 3-வது முறையாக பிரதமர் பதவி வகித்தபோது கடந்த 2000-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு வருகை தந்தார். அதேபோன்று தற்போது பிரதமர் மோடியும் மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கு பிறகே நேற்று இங்கு வருகை தந்துள்ளதாக அந்த சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்மிருதி மந்திரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் மற்றும் எம்.எஸ். கோல்வால்கர் நினைவிடங்களுக்கும் சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உடனிருந்தார்.
‘‘ஹெட்கேவர் மற்றும் கோல்வால்கர் ஆகிய இருவரின் நினைவிடம் லட்சக்கணக்கான சுயம்சேவக் தொண்டர்களுக்கு உத்தவேகம் அளிக்கும் இடமாக உள்ளது. அவர்கள் நாட்டின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றினர்’’ என்று பிரதமர் மோடி கூறினார்.
அம்பேத்கர் காட்டிய வழியில் மோடி அரசு: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமிக்கு நேற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பி.ஆர். அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் கூறியதாவது: சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கும் சின்னமாக நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி உயர்ந்து நிற்கிறது. நாம் கண்ணியத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதை உறுதி செய்யும் அரசியலமைப்பை வழங்கியதற்காக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு இந்திய தலைமுறையினர் எப்போதும் நன்றியுடன் இருப்பர்.
அவர் காட்டிய பாதையில்தான் எனது அரசு எப்போதும் நடந்து வருகிறது. அம்பேத்கர் கனவு கண்ட இந்தியாவை நனவாக்க இன்னும் அதிக உறுதிப்பாட்டுடன் உழைக்க வேண்டும். அதில் நாங்கள் இன்னும் தீவிரமாக உள்ளோம் என்பதை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு பிரதமர் கூறினார்.
அரசமைப்பு சட்டத்தை அழிக்க மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் அம்பேத்கர் குறித்து பிரதமர் இவ்வாறு கூறியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...