Published : 31 Mar 2025 06:35 AM
Last Updated : 31 Mar 2025 06:35 AM
புதுடெல்லி: பிஹாரில் லாலு - ராப்ரி தேவி ஆட்சி என்றாலே காட்டாட்சிதான் நினைவுக்கு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். பிஹார் மாநிலத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அங்கு ரூ.800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ரூ.181 கோடி மதிப்பில் காவல்துறை கட்டிடங்கள், ரூ.109 கோடி மதிப்பில் 3 போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
கோபால்கன்ச் பகுதியில் அவர் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தையும் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: பிஹாரில் லாலு - ராப்ரி தேவி ஆட்சிகாட்டாட்சியைத்தான் நினைவுபடுத்துகிறது. பிஹாரின் வளர்ச்சிக்கும், ஊரக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் லாலு எதையும் செய்யவில்லை. ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டன.
பிஹாரில் லாலு ஆட்சி காலத்தில் கொலைகள், கடத்தல்கள், கால்நடை தீவன ஊழல் ஆகியவை நடந்தன. கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பிஹாரில் லாலு அரசு என்ன செய்தது? மாநில முழுவதும் மாட்டுத் தீவன ஊழல் செய்து பிஹாரை உலகளவில், தேசிய அளவில் அவமானப்படுத்தியது லாலு பிரசாத் அரசு. பிஹார் வரலாற்றில் காட்டாட்சி என்றாலே லாலுபிரசாத் ஆட்சிதான் நினைவுக்குவரும்.
ஆனால் முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. வீடுகள், கழிவறை கள், குடிநீர், மருத்துகள் மற்றும் ரேசன் ஆகியவை வழங்கி பிஹாரின் ஏழை மக்கள் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி பணியாற்றியுள்ளார்.
பிஹாரில் காட்டாட்சி, கோஷ்டி மோதல், கடத்தல் தொழில் மீண்டும் திரும்புவதை மக்கள் விரும்பவில்லை. இங்கு தே.ஜ.கூட்டணி கட்சியின் வெற்றி உறுதி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தே.ஜ கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...