Published : 30 Mar 2025 07:03 PM
Last Updated : 30 Mar 2025 07:03 PM

ஒடிசாவில் தடம்புரண்ட பெங்களூரு - காமாக்யா அதிவிரைவு ரயில்: ஒருவர் உயிரிழப்பு

கட்டாக்: ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் பெங்களூரு - காமாக்யா ஏசி அதிவிரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெங்களூருவில் இருந்து குவாஹாட்டியில் இருக்கும் காமாக்யா நேக்கி சென்று கொண்டிருந்த ஏசி அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை தடம்புரண்டுள்ளது. சம்பவத்தை உறுதிப்படுத்திய மாவட்ட ஆட்சியர் தத்தாத்ரயா பவுசாஹேப் ஷிண்டே உயிரிழப்பு மற்றும் காயம்பட்டவர்களின் எண்ணிக்கையையும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ரயில் தடம்புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிசிச்சை தேவைப்பட்டதால் அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.” என்றார்.

விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அசோக் குமார் மிஸ்ரா கூறுகையில், “எஸ்எம்விடி பெங்களூரு - காமாக்யா ஏசி விரைவு ரயிலின் 11 பெட்டிகள் மாங்குயிலில் முற்பகல் 11.54 மணிக்கு தடம் புரண்டது. விபத்து நடந்த இடத்தில் சிக்கித்தவிக்கும் பயணிகளை அழைத்து செல்வதற்கு மீட்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஒரு கட்டுப்பாட்டு அறையும், உதவி எண்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் விபரங்களை விரைவில் பகிர்வோம்” என்று தெரிவித்தார்.

மீட்பு மற்றும் நிவாரண அதிகாரிகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து காரணமாக, தவுலி விரைவு ரயில், நீலாசல் விரைவு ரயில் மற்றும் புருலியா விரைவு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில் ரயில்வே துறையினருக்கு உதவியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ஒடிசா மாநில தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று ஒடிசா மாநில தீயணைப்புத்துறை இயக்குநர் சுதான்சு சாரங்கி தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ள அசாம் மாநில முதல்வர் ஹேமந்த பிஸ்வா அசாம் அரசு ஒடிசா அரசுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எஸ்க் பதிவில், “ஒடிசாவில் காமாக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது குறித்து நான் அறிவேன். அசாம் அரசு, ஒடிசா அரசு மற்றும் ரயில்வே துறையுடன் தொடர்பில் உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் தொடர்பு கொள்வோம். விபத்தில் அசாமில் இருந்து யாரும் உயிரிழக்கவில்லை. இரண்டு பேர் மட்டும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x