Published : 30 Mar 2025 07:35 AM
Last Updated : 30 Mar 2025 07:35 AM

விவாகரத்துக்கு பிறகு டேட்டிங் செயலி மூலம் ஏற்பட்ட காதலால் ரூ.6.3 கோடியை இழந்த இளைஞர்

புதுடெல்லி: காதல் விவகாரத்தால் டெல்லி நொய்டாவை சேர்ந்த இளைஞர் ரூ.6.3 கோடியை இழந்துள்ளார். டெல்லி அருகேயுள்ள நொய்டாவின் செக்டர் 76-வது பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் நீதிமன்றம் மூலம் அண்மையில் விவாகரத்து பெற்றனர்.

இதன்பிறகு டேட்டிங் செயலி மூலம் புதிய காதலியை நொய்டா இளைஞர் தேடினார். கடந்த டிசம்பரில் டேட்டிங் செயலி வாயிலாக அனிதா என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். ஹைதராபாத்தை சேர்ந்த அந்த பெண், நொய்டா இளைஞருடன் செல்போன், சமூக வலைதளங்கள் மூலம் காதலை வளர்த்தார். இருவரும் எதிர்காலம் குறித்து திட்டமிட்டனர்.

ஹைதராபாத் காதலியின் அறிவுறுத்தலின்படி குறிப்பிட்ட டெலிகிராம் கணக்கில் நொய்டா இளைஞர் இணைந்தார். அந்த செயலி வாயிலாக முதலில் ரூ.3.20 லட்சத்தை முதலீடு செய்தார். இதன்மூலம் அவருக்கு ரூ.24,000 லாபம் கிடைத்தது.

இதன்காரணமாக நொய்டா இளைஞருக்கு, ஹைதராபாத் காதலி மீதான நம்பிக்கை அதிகரித்தது. காதலி அனிதாவின் அறிவுரைப்படி பல்வேறு திட்டங்களில் அவர் பல கோடிகளை முதலீடு செய்தார். இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மார்ச் 3-ம் தேதி வரை மொத்தம் ரூ.6.3 கோடியை பல்வேறு திட்டங்களில் அவர் முதலீடு செய்தார். இதன்மூலம் அவருக்கு ரூ.2 கோடி லாபம் கிடைத்திருப்பதாக டெலிகிராம் செயலி வாயிலாக அறிவிக்கப்பட்டது.

இந்த தொகையை நொய்டா இளைஞர் பெற விரும்பியபோது, பணம் கிடைக்கவில்லை. அவர் இணைந்திருந்த டெலிகிராம் செயலி திடீரென மூடப்பட்டது. ஹைதராபாத் காதலியின் செல்போனும் அணைக்கப்பட்டது. அவரது சமூக வலைதள கணக்குகளும் முடங்கின.

இந்த மோசடி குறித்து சைபர் குற்றப்பிரிவில் நொய்டா இளைஞர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் டிசிபி பிரித்தீ யாதவ் கூறும்போது, “டேட்டிங் செயலி மூலம் இளைஞர் ஏமாற்றப்பட்டு உள்ளார். அவர் முதலீடு செய்த ரூ.6.3 கோடி, 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒட்டுமொத்த சேமிப்பையும் இளைஞர் இழந்திருக்கிறார். இதேபோல நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x