Published : 30 Mar 2025 06:35 AM
Last Updated : 30 Mar 2025 06:35 AM
புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கல்வி நிறுவனங்களில் கட்டிடங்களின் கூரைகளாக அஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது இத்துறை சார்ந்த விஞ்ஞானிகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதற்கு 65-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் என்ற வகையில், பள்ளிக்கூடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை தடை செய்வது தொடர்பாக மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளேன். பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்கும் விஷயத்தில் சமரசத்துக்கு இடம் இல்லை.
அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் புதிய கட்டுமானம் அல்லது புதுப்பித்தலில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ள ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பு பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...