Published : 30 Mar 2025 06:29 AM
Last Updated : 30 Mar 2025 06:29 AM

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் முற்போக்கான மாநிலமாக தமிழகம் கருதப்பட்டது. ஆனால் திமுக அரசின் தவறான கொள்கைகளால் தமிழகம் தடுமாறி குழப்பத்துக்கு ஆளாகி நிற்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். இதற்காவே அவர் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக பேசுகிறார்.

தமிழக அரசு முதலில் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டது. பின்னர் திடீரென ஏற்க மறுக்கிறது. இதுதொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஊழல் விவகாரங்கள் காரணமாக ஆளும் திமுக அரசு மீது மக்கள் ஏற்கெனவே கடும் அதிருப்தியில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார். அவர் தனது மகன் உதயநிதியை முன்னிறுத்தி வருகிறார். இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே தேசிய கல்வி கொள்கையை திமுக எதிர்க்கிறது. இந்த உண்மை தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தாய் மொழி கல்விக்கு தேசிய கல்வி கொள்கை முன்னுரிமை அளிக்கிறது. இதை அமல்படுத்தினால் தமிழில் கல்வி கற்பிக்கப்படும். பொறியியல், மருத்துவம் சார்ந்த உயர் கல்வி படிப்புகளும் தமிழில் கற்பிக்கப்படும். பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்க நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அவர்கள் இதுவரை ஏற்கவில்லை.

தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி மொழிகளில் பொறியியல் கல்வி கற்பிக்கப்படுகிறது. சுமார் 1,500 பட்டப்படிப்பு நூல்கள் 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை படிப்பு சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் திமுகவின் எதிர்ப்பால் தமிழில் இந்த நுழைவுத் தேர்வை நடத்த முடியவில்லை.

மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எதுவுமே அறிவிக்கவில்லை. ஆனால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக இதுதொடர்பாக திமுக பிரச்சினை எழுப்புகிறது. கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு ஊழலில் மட்டுமே திளைத்து வருகிறது. தற்போது திடீரென விழித்து மக்களவை தொகுதி மறுவரையறை குறித்து பேசுகின்றனர்.

மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. 0.0001 சதவீதம்கூட அநீதி இழைக்கப்படாது.

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக, தமிழ் மொழிக்கு எதிராக செயல்படுகிறது. திமுக அரசின் ஊழல்கள் காரணமாக தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் வெளியேறி வருகின்றனர். தொழில் நிறுவனங்களும் வெளியேறி வருகின்றன. மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

வளர்ச்சி அடைந்த பாரதம்: வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்து உள்ளார். இதற்காக மத்திய அரசு அதிதீவிரமாக உழைத்து வருகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சி செய்வோம். மணிப்பூரில் அமைதி திரும்பி உள்ளது. அந்த மாநிலத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும், சந்தைகளும் வழக்கம்போல செயல்படுகின்றன.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x