Published : 30 Mar 2025 06:16 AM
Last Updated : 30 Mar 2025 06:16 AM
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கதுவா பகுதியில் தீவிரவாதிகளைத் தேடும் போலீஸாரின் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டம் ராஜ்பாக் பகுதியில் ஜக்கோலே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு 2 நாட்களுக்கு முன்பு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார், ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸார் அடங்கிய சிறப்பு ஆபரேஷன் குழுவினர் என 4 பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை (மார்ச் 28) காலை 8 மணிக்கு ஜக்கோலே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சிறப்பு ஆபரேஷன் குழுவினர் சுற்றிவளைத்தனர். இந்த தேடுதல் வேட்டை திட்டத்துக்கு `ஆபரேஷன் சபியான்' என்று பெயர் சூட்டப்பட்டது.
தீவிரவாதிகள் தாக்குதல்: போலீஸார் அப்பகுதிகயை சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். காலை தொடங்கிய இந்தத் துப்பாக்கிச்சூடு மாலைவரை நீடிதத்து. இந்த என்கவுன்ட்டரில் மொத்தம் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் 3 போலீஸார் உயிரிழந்ததாகவும், டிஎஸ்பி உள்பட 7 போலீஸார் காயமடைந்ததாகவும் தெரியவந்தது.
இந்நிலையில் என்கவுன்ட்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் ஒரு போலீஸ்காரரின் உடலை போலீஸார் நேற்று கைப்பற்றினர்.
இதனால் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.
நேற்று முன்தினம் காவல்துறையைச் சேர்ந்த பல்விந்தர் சிங் சிப், ஜஸ்வந்த் சிங், தாரிக் அகமது ஆகியோர் இறந்தனர். இந்நிலையில் நேற்று காலை, வனப்பகுதியில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது போலீஸ் தலைமைக் கான்ஸ்டபிள் ஜக்பிர் சிங் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 4 போலீஸாரின் உடலும் மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் கதுவா மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு 4 போலீஸாரின் உடல்களுக்கு போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் போலீஸ் டிஜிபி நளின் பிரபாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2 பேர் மட்டுமே உயிரிழப்பு: நேற்று முன்தினம் 3 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் மட்டுமே இறந்தனர் என்று போலீஸ் டிஜிபி நளின் பிரபாத் நேற்று தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றும் போலீஸாரின் தேடுதல் வேட்டை கதுவா பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. கதுவா, அதைச் சுற்றிலுள்ள பில்லாவர் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment