Published : 14 Jul 2018 03:07 PM
Last Updated : 14 Jul 2018 03:07 PM

இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடிய பழம்பெரும் பாடகி கே.ராணி காலமானார்

இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடிய பழம்பெரும் பாடகி கே.ராணி உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்.  அவருக்கு வயது 75.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கே.ராணி. கடந்த 1943-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 8-வது வயதிலேயே சங்கீதத்தில் சிறந்து விளங்கினார். இவர் முதன்முதலாக தமிழில் மோகனசுந்தரம், சிங்காரி ஆகிய படங்களிலும், தெலுங்கில் ரூபவதி என்கிற படத்திலும் பாடினார். சிங்கள மொழியில் இவர் பாடிய திரைப்படப் பாடல்களும் பிரபலமாகின. இதனைத் தொடர்ந்து இவர் இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடினார். இவரின் சங்கீத ஞானத்தை பார்ந்து வியந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர், இவருக்கு இன்னிசை ராணி என்கிற பட்டத்தை வழங்கினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், பெங்காலி ஆகிய மொழித் திரைப்படங்களில் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை ராணி பாடியுள்ளார். இதில் தமிழில் கல்யாணி, கல்யாணம் பண்ணிப்பார், தேவதாஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை, இதில் தேவதாஸில் இவர் பாடிய “எல்லாம் மாயை தான” எனும் பாடல் பிரசித்தி பெற்றது. 60-களில் இவர் திமுகவுக்காக பல பிரச்சாரப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், பாடகர் நாகூர் ஹனீஃபா வுடன் இணைந்து இஸ்லாமியப் பாடல்களைப் பாடியும் பிரபலமானார்.

ராணி கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத் கல்யாண் நகரில் உள்ள தனது மகள் விஜயாவின் வீட்டில் வசித்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்  குறைவால் உயிரிழந்தார். இவர் உடலுக்கு தெலுங்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x