Published : 29 Mar 2025 04:19 PM
Last Updated : 29 Mar 2025 04:19 PM
புதுடெல்லி: நாட்டின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், அதன் தீர்ப்புகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 'சுற்றுச்சூழல் – 2025' எனும் இரணடுநாள் தேசிய மாநாட்டை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து நாட்களும், அவற்றின் நோக்கங்களையும், திட்டங்களையும் ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிக்கின்றன. விழிப்புணர்வு மற்றும் அனைவரின் பங்களிப்பின் மூலமே சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்பாடும் சாத்தியமாகும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகள் எந்தப் பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பார்கள், அவர்கள் என்ன தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கவலைப்படுகிறார்கள். இந்தக் கவலை நியாயமானதுதான். ஆனால், நாமனைவரும் கூட நமது குழந்தைகள் எந்த வகையான காற்றைச் சுவாசிப்பார்கள், அவர்களுக்கு குடிக்க எந்த வகையான தண்ணீர் கிடைக்கும், பறவைகளின் இனிமையான ஒலிகளை அவர்களால் கேட்க முடியுமா, பசுமையான காடுகளின் அழகை அவர்களால் அனுபவிக்க முடியுமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.
வரும் தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழலை பாரம்பரியமாக வழங்குவது நமது தார்மீகப் பொறுப்பாகும். இதற்காக, நாம் சுற்றுச்சூழல் உணர்வு மற்றும் உணர்திறன் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் மேம்படுத்தப்படுவதோடு, சுற்றுச்சூழலை மேலும் துடிப்பானதாக மாற்ற முடியும். தூய்மையான சுற்றுச்சூழலையும், நவீன வளர்ச்சியையும் சமநிலைப்படுத்துவது ஒரு வாய்ப்பாகவும் சவாலாகவும் உள்ளது.
ஒரு தாயைப் போல இயற்கை நமக்கு ஊட்டமளிக்கிறது. நாம் இயற்கையை மதித்து பாதுகாக்க வேண்டும். இந்திய பாரம்பரிய வளர்ச்சியின் அடிப்படை சுரண்டல் அல்ல; பாதுகாப்பே. இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, வளர்ந்த இந்தியாவை நோக்கி முன்னேற விரும்புகிறோம். கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச ஒப்பந்தங்களின்படி தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பை விரைந்து முடிப்பதில் இந்தியா பல உதாரணங்களை சாதித்துள்ளது.
நமது நாட்டின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய வரலாற்று முடிவுகள் நம் வாழ்க்கை, நமது ஆரோக்கியம் மற்றும் நமது பூமியின் எதிர்காலம் ஆகியவற்றில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட வேண்டும்.
நமது நாடும், ஒட்டுமொத்த உலக சமுதாயமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதையைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் உண்மையான முன்னேற்றத்தை அடையும். இந்தியா தனது பசுமை முயற்சிகள் மூலம் உலக சமூகத்திற்கு பல முன்மாதிரியான உதாரணங்களை வழங்கியுள்ளது. அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்புடன், உலக அளவில் பசுமை தலைமையின் பங்கை இந்தியா வகிக்கும். 2047-ம் ஆண்டுக்குள் காற்று, நீர், பசுமை மற்றும் வளம் ஆகியவை ஒட்டுமொத்த உலக சமுதாயத்தையும் ஈர்க்கும் வகையில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment