Published : 29 Mar 2025 05:27 AM
Last Updated : 29 Mar 2025 05:27 AM

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மம்தாவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 22-ம் தேதி இரவு கொல்கத்தாவில் இருந்து லண்டன் புறப்பட்டார். கடந்த 23-ம் தேதி முதல் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். லண்டனில் நடைபெற்ற தொழிலதிபர்களின் கூட்டத்தில் முதல்வர் மம்தா பங்கேற்றார். அப்போது மேற்குவங்கத்தில் தொழில் தொடங்க, முதலீடு செய்ய தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கெல்லாக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில் மம்தா பங்கேற்று உரையாற்றினார். அப்போது 'இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு-யுகே' என்ற அமைப்பு சார்பில் மம்தாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

மேற்குவங்கத்தில் நடைபெறும் வன்முறைகள், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை, சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறும்போது, “மாணவர்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். இது அரசியல் களம் கிடையாது. அரசியல்ரீதியாக என்னோடு மோத வேண்டும் என்றால் மேற்குவங்கத்துக்கு வாருங்கள். நான் வங்கப் புலி. எதற்கும் அஞ்ச மாட்டேன்" என்று தெரிவித்தார்.

ஆனால் மாணவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர், கண்டன பதாகைகளை உயர்த்தி காண்பித்தனர். இதைத் தொடர்ந்து மம்தா தனது உரையை பாதியில் நிறுத்தினார்.

முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மம்தா பேசியதாவது:

சமுதாயத்தில் ஒற்றுமையை பேணுவது மிகவும் கடினம். ஆனால் பிரிவினையை மிக எளிதாக தூண்டலாம். நான் மேற்குவங்க முதல்வராக இருக்கும்வரையில் பிரிவினைக்கு இடம் அளிக்க மாட்டேன். அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மேற்குவங்கத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், நேபாளிகள், கூர்க்கா என சுமார் 33 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவர். சுமார் 6 சதவீதம் பேர் பழங்குடிகள். சுமார் 23 சதவீதம் பேர் பட்டியலின மக்கள். அவர்கள் அனைவரின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன்" என்று தெரிவித்தார்.

பாஜக கண்டனம்: இந்த நிகழ்ச்சியின்போது வரும் 2060-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. 'அதற்கு வாய்ப்பில்லை' என்று மம்தா கூறினார்.

இதுதொடர்பான வீடியோவை பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்திய உருவெடுப்பதை முதல்வர் மம்தா விரும்பவில்லை. இது வெட்கக்கேடானது. அந்நிய மண்ணில் இந்தியாவின் மாண்பை அவர் சீர்குலைத்து உள்ளார். ஒரு முதல்வர் இவ்வாறு கூறியது மிகவும் வருந்தத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x