Published : 29 Mar 2025 05:08 AM
Last Updated : 29 Mar 2025 05:08 AM
எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மத்திய அரசு செய்துகொள்ளாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (ஏபி-பிஎம்ஜேஏஒய்) திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறும் மக்களின் எண்ணிக்கை 62 கோடியாக உள்ளது. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இருந்தபோதிலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மருத்துவமனைகள் செய்து கொள்வதில்லை. உலகத் தரத்தில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டில் தொடங்கினார். பாஜக மூத்த தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன.
தற்போது பிரதமர் நரேந்திர மோடி 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டம் பயனாளிகள் அடிப்படையில் விரிவடைந்து கொண்டே வருகிறது. தொடக்கத்தில் ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் 10.74 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டன. பின்னர் 10.74 கோடி குடும்பத்தில் இருந்து 12 கோடி குடும்பங்களாக உயர்த்தப்பட்டன.
தற்போது இந்த திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆஷா ஊழியர்கள் 37 லட்சம் பேர் பயனடையும் வகையில் விரிவடைந்துள்ளது.
மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டமானது 70 வயதைத் தாண்டிய 6 கோடி மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...