Published : 28 Mar 2025 05:15 PM
Last Updated : 28 Mar 2025 05:15 PM

யஷ்வந்த் வர்மா ‘பணக்கட்டு’ விவகாரத்தில் இறுதி முடிவை தலைமை நீதிபதி எடுப்பார்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில் எரிந்த நிலையில் பணக் கட்டுகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட உள் விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவை தலைமை நீதிபதி எடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில், பொருட்கள் வைக்கும் அறையில் கடந்த 14-ம் தேதி இரவு தீப்பிடித்தது. அங்கு எரிந்த நிலையில் பணக் கட்டுகள் சிக்கிய விவகாரம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி, யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்துக்கும், தனது குடும்பத்தினருக்கும் சம்பந்தம் இல்லை, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த சதி என நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம் அளித்தார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதில் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தவாலியா, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல்நாகு, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதேவேளையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி நெடும்பாரா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மாரச் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, தீ விபத்து குறித்தோ, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தோ என் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று நெடும்பாரா கேள்வி எழுப்பினார்.

மேலும், நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் அதிகார வரம்பு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி உஜ்ஜல் பூயானுடன் கூடிய அமர்வுக்கு தலைமை தாங்கும் நீதிபதி ஏ.எஸ்.ஓகா, “தற்போது, ​​உள் விசாரணை நடந்து வருகிறது. அறையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்துக்கு நீதிபதி வர்மா எவ்வாறு கணக்கு காட்டுகிறார்; பணத்துக்கான ஆதாரம்; மார்ச் 15 அன்று அறையிலிருந்து அதை யார் அகற்றினார்கள் எனும் மூன்று கேள்விகளை குழு ஆழமாக ஆராய்ந்து வருகிறது. குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன், இந்திய தலைமை நீதிபதிக்கு முன் அனைத்து விருப்பங்களும் உள்ளன. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கு அவர் ஒப்புக் கொள்ளலாம் அல்லது நீதிபதியை நீக்குவதற்காக குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம்” என்று வழக்கறிஞரும் மனுதாரருமான மேத்யூஸ் ஜே.நெடும்பராவிடம் கூறினார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வழக்கு தொடர்பாக உள் விசாரணை நடந்து வருவதால் இந்த மனுவை ஏற்றுக்கொள்வது பொருத்தமற்றது என்று தீர்ப்பளித்துள்ள அமர்வு, மனுவில் முன்வக்கப்படும் கோரிக்கைகள் தற்போதைய கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x