Published : 28 Mar 2025 04:38 AM
Last Updated : 28 Mar 2025 04:38 AM
புதுடெல்லி: வரும் 31-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் அன்றைய தினம் சிறப்பு தொழுகை நடத்த போலீஸார் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இதற்காக, உ.பி.யின் சம்பல் பகுதியில் அனைத்து சமூகத்தினர் பங்கேற்ற அமைதி குழு கூட்டம் மாவட்ட ஏஎஸ்பி ஷ்சந்திரா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பொது மக்களும் பங்கேற்றனர். இதுகுறித்து ஏஎஸ்பி ஷ்சந்திரா கூறுகையில், “ரம்ஜான் ஈத் பண்டிகை அன்று, சம்பல் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை.
மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படாது. ஈத்கா மற்றும் மசூதிகளின் வளாகத்துக்குள் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும், இந்த பாரம்பரிய தொழுகை வேளையின்போது மின்சாரம், தண்ணீருக்கான ஏற்பாடுகள் சீராக செய்யப்படும். இதேபோல், மக்கள் பரஸ்பர நல்லிணக்கத்துடன் ஈத் முடித்த பின் அடுத்து வரவிருக்கும் நவராத்திரியையும் அமைதியாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மீரட்டிலும் எச்சரிக்கை: சம்பல் அருகிலுள்ள மீரட் பகுதியிலும் சாலையில் ஈத் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி. எச்சரித்துள்ளார். மீரட்டின் பதற்றமான பகுதிகளில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சிசிடிவி, ட்ரோன்கள் மற்றும் உள்ளூர் உளவு துறை மூலம் தொழுகை நடத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீறினால் பாஸ்போர்ட் பறிமுதல்: நிபந்தனைகளை மீறினால் அவர்களது பாஸ்போர்ட் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மீரட் போலீஸார் எச்சரித்துள்ளனர். கரோனா பரவல் காலத்துக்கு பிறகு இதுபோல் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக மசூதிகளில் எச்சரிக்கை தொடங்கியது. ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளிலும் இந்த எச்சரிக்கை தொடர்கிறது. உ.பி.யில் கடந்த ஆண்டு ரம்ஜான் தொழுகைகளின் போது போலீஸாரின் உத்தரவுகளை மீறியதற்காக 200 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...