Published : 28 Mar 2025 04:23 AM
Last Updated : 28 Mar 2025 04:23 AM
மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ரேவந்த் ரெட்டி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு உறுப்பினர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர். அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் மக்களவை தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா பேரவை தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது. மக்களவை தொகுதி மறுவரையறை குறித்து அனைத்து கட்சிகள், மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்து அதன்பிறகு வெளிப்படையாக முடிவை வெளியிட்டிருக்க வேண்டும். தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழலில் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யக்கூடாது.
தெலங்கானா சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை 119-ல் இருந்து 153 ஆக உயர்த்த வேண்டும் என பேரவை தீர்மானிக்கிறது. இதற்கு தேவையான அரசியல் அமைப்பு சட்ட திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் தென் மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை தெலங்கானா சட்டப்பேரவை முழுமையாக நிராகரிக்கிறது. இவ்வாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.
இதைத் தொடர்ந்து மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment