Published : 28 Mar 2025 03:50 AM
Last Updated : 28 Mar 2025 03:50 AM
சாலை விபத்துக்களை குறைக்க ரூ.10 லட்சம் கோடி செலவில் 23,000 கி.மீ நீளமுள்ள இருவழி நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மக்களவை கேள்வி நேரத்தின் போது மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிகட்கரி கூறியதாவது: இருவழி நெடுஞ்சாலைகள் ரூ.10 லட்சம் கோடி செலவில் 25,000 கி.மீ தூரத்துக்கு நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. இத்திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும், விபத்துக்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்குவழி நெடுஞ்சாலைகள் ரூ.6 லட்சம் கோடி செலவில் 16,000 கி.மீ தூரத்துக்கு 6 வழிச் சாலைகளாக மாற்றப்படும். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் ரூ.2 லட்சம் கோடி செலவில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பயணங்களை எளிதாக்க 105 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. ஜோஜிலா என்ற இடத்தில் கட்டப்படும் சுரங்கப்பாதை ஆசியாவிலேயே நீளமானது. ஜீரோ டிகிரிக்கு கீழே வெப்பநிலை இருக்கும் பகுதியில் இது அமைக்கப்படுகிறது. மிகச் சிறந்த பொறியியல் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் இந்த சுரங்கப்பாதையை பார்வையிட சபாநாயகர் மற்றும் எம்.பி.கள் வர வேண்டும்.
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 36 சுரங்கப் பாதைகள் கட்டப்படுகின்றன. இவற்றில் 22 சுரங்கப் பாதைகள் முடிவடைந்து விட்டன. இப்பணிகள் முடிவடைந்ததும், ஜம்மு -ஸ்ரீநகர் பயண நேரம் 7 மணி நேரத்திலிருந்து மூன்றரை மணி நேரமாக குறையும். டெல்லி-கத்ரா விரைவுசாலை பணிகள் நிறைவடைந்ததும், இதன் பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து 6 மணியாக குறையும். இவ்வாறு நிதின்கட்கரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...