Published : 27 Mar 2025 06:21 PM
Last Updated : 27 Mar 2025 06:21 PM

தமிழக மீனவர் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் புதிய விளக்கம்

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவது குறித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன. 1996-ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979-ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்கு முறைச் சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன. இதனால் மிகவும் கடுமையான தண்டனைகள், அதிக அபராதங்கள் மற்றும் அதிக தடுப்புக்காவல் ஆகியவை விதிக்கப்படுகின்றன.

படகு உரிமையாளர்கள், படகை இயக்குபவர்கள், மீண்டும் மீண்டும் குற்றமிழைப்பவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் இலங்கை சிறையில் கைதிகளாக இருக்கிறார்கள். இது தீர்வுக்கான முயற்சிகளை சிக்கலாக்குகிறது. நமது அரசு இந்தப் பிரச்சினையை பாரம்பரிய வழியில் பெற்றுள்ளது என்பதை சபை அறிந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை 1974-இல் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையப்பட்டபோது தொடங்கியது. அதைத் தொடர்ந்து 1976-இல் மீன்பிடி அதிகார வரம்பை வரையறுக்கும் கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. இந்த முடிவுகள்தான் நிலைமைக்கான மூல காரணம்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மீனவர்கள் புவியியல் அருகாமை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களாக இருப்பது இயல்பானது. நேற்று வரை, இலங்கை காவலில் 86 இந்திய மீனவர்கள் இருந்தனர். இன்று, மேலும் ஒரு இழுவை படகும், 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம், 97 பேர் காவலில் உள்ளனர். இவர்களில், 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர், இன்று 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று சென்னை விமான நிலையத்தை அடைந்தனர். இவர்களில் 4 பேர் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதியும், 3 பேர் பிப்ரவரி 22-ஆம் தேதியும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x