Published : 27 Mar 2025 04:39 PM
Last Updated : 27 Mar 2025 04:39 PM

“இடதுசாரிகளுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்க பெருநிறுவன ஊடகங்கள் முயற்சி!” - பினராயி விஜயன்

பினராயி விஜயன் | கோப்புப் படம்

கோழிக்கோடு: “பெருநிறுவனங்களால் இயக்கப்படும் சில ஊடக நிறுவனங்கள், உண்மைகளை மறைத்து, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட உள்ளடக்கத்தைப் பரப்புவதன் மூலம் மாநிலத்தில் இடதுசாரிகளுக்கு எதிரான ஒரு சிந்தனையை உருவாக்க முயல்கின்றன. இது படிப்படியாக நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தலாக மாறும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் புதிதாகக் கட்டப்பட்ட தேசாபிமானி செய்தித்தாளின் அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய பினராயி விஜயன், "மாநிலத்தின் வளர்ச்சித் தேவைகளும், மாநிலத்தின் தேவைகள் மீதான மத்திய அரசின் அலட்சியமும் பெருநிறுவனங்களால் இயக்கப்படும் ஊடகங்களின் பக்கச்சார்பான செய்தித் தேர்வால் மறைக்கப்படுகின்றன.

வாலையார் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்தும், கலமசேரி பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் இருந்து சமீபத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் ஒரு சில ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்ட விதம், பாரபட்சமான ஊடக அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. சம்பவங்களில் இடதுசாரிகளுக்கு ஆதரவான தொழிலாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுவதால் மட்டுமே சில ஊடகங்கள் இந்த சம்பவத்தை கையில் எடுத்தன. உண்மை வெளிவந்ததும் அவர்கள் அனைவரும் அதை வெளியிடுவதை நிறுத்திவிட்டனர்.

இடதுசாரிகளை இழிவுபடுத்துபவர்கள் ஹீரோக்களாகப் போற்றப்படுகிறார்கள் என்ற மோசமான போக்கை மாநிலம் காண்கிறது. உள்ளூர் செய்தி சேனல்கள் உட்பட ஊடகங்களின் நிறுவனமயமாக்கல், பெருநிறுவனங்களின் நலனுக்கு மட்டுமே ஏற்றதாக உள்ளது. நமது நாட்டில் மாறிவரும் ஊடகப் போக்கு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். உண்மையை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு ஏற்ப, சிறந்த ஊடக பகுப்பாய்வு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நேரம் இது.

கடந்த காலத்தில் உண்மைக்காகவும், பாரபட்சமற்ற அணுகுமுறைக்காகவும் பாராட்டப்பட்ட சில ஊடக நிறுவனங்களால் பரப்பப்படும் அரசியல் சார்புடைய செய்திகள் கவலை அளிக்கின்றன. தீவிர நிறுவனமயமாக்கல் போக்கால், மாநிலத்தின் நலன் ஊடகங்களால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது" என கவலை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கோழிக்கோடு மேயர் பீனா பிலிப் மற்றும் தேசாபிமானி தலைமை ஆசிரியர் புத்தலத் தினேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x