Published : 27 Mar 2025 04:44 PM
Last Updated : 27 Mar 2025 04:44 PM
புதுடெல்லி: “100 நாள் வேலைத் திட்டத்தின் பாக்கியை வட்டியோடு கொடுப்பீர்களா?” என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
இது குறித்து நாடாளுமன்ற மக்களவையின் கேள்வி நேரத்தில் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி கருணாநிதி பேசுகையில், “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி (நூறு நாள் வேலை வாய்ப்பு) திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை தாமதமாக வழங்கக் கூடாது. இதை, 15 நாட்கள் தாமதம் செய்தால் அதற்குண்டான வட்டியை சேர்த்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் விதி. தமிழ்நாட்டில் உபகரணங்கள் - ஊதியம் என்ற வகையில சுமார் ரூ.4,034 கோடி தொகை கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ளது.
இது குறித்து எங்கள் முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாங்களும் துறை அமைச்சரை சந்தித்து, இந்த நிதியை விரைந்து வழங்குமாறு வேண்டுகோள் வைத்தோம். நாங்கள் இன்னும் அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். எப்போது அந்த நிதியை விடுவிப்பீர்கள்? ஏற்கெனவே 5 மாதங்களாக பாக்கி இருக்கிறது. எனவே, வட்டியும் சேர்த்து வழங்குவீர்களா?’ எனக் கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசனி அளித்த பதிலில், “இந்தத் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் விதிகளின்படி 15 நாட்களுக்கு மேல் நிதி நிலுவையில் வைக்கப்பட்டிருந்தால் 16-ஆம் நாளில் இருந்து 0.05 சதவிகித வட்டி வழங்கப்பட வேண்டும். மேலும் நிதி தாமதமானால், முதலில் மாநில அரசு தொகையை செலுத்திட வேண்டும்; பிறகு அதை ஒன்றிய அரசு கொடுத்துவிடும் என்பதுதான் விதிகளில் இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.7,300 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி. உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடி. உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாடு அதிக நிதியை பெற்றிருக்கிறது. எனவே, நிதி கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு இடமில்லை” என்று பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...