Published : 27 Mar 2025 12:47 PM
Last Updated : 27 Mar 2025 12:47 PM
புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் வங்கதேச தேசிய தினம் சான்றாக இருக்கிறது என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வங்கதேச தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, பேராசிரியர் முகமது யூனுஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், முகமது யூனுஸுக்கும் வங்கதேச மக்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இந்த நாள் நமது இருதரப்பு கூட்டாண்மைக்கு அடித்தளமிட்ட நமது பகிரப்பட்ட வரலாறு மற்றும் தியாகங்களுக்கு ஒரு சான்றாக நிற்கிறது. வங்கதேச விடுதலைப் போரின் உணர்வு, நமது உறவுக்கு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்கிறது. இது பல களங்களில் செழித்து, நமது மக்களுக்கு உறுதியான நன்மைகளைத் தருகிறது.
ஒருவரின் நலன் மற்றும் கவலைகளை மற்றொருவர் பரஸ்பரம் உள்வாங்கிக் கொண்டு உணர்வுடன் செயல்படுவதன் மூலம், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் அதன் அடிப்படையில் கூட்டாண்மையை கொண்டு செல்லவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து பிரிந்து, பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த இன்றைய வங்கதேசம், பாகிஸ்தானிடம் இருந்து 1971-ம் ஆண்டு மார்ச் 26-ம் நாள் விடுதலைப் பெற்றது. விடுதலைப் பெற்ற இந்த நாளை வங்கதேச சுதந்திர நாளாக 1971 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மான் அறிவித்தார்.
வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்ற இந்தியா, மார்ச் 26-ம் தேதியை வெற்றி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இந்தியாவால் விடுதலைப் பெற்ற நாடு என்பதால், வங்கதேசம் இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டிருந்தது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக பெரும்பான்மை முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. மேலும், வங்கதேசத்தில் வாழும் இந்து சிறுபான்மையினரின் நிலை குறித்து இந்தியத் தலைவர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சீராக இல்லை.
வங்கதேசத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முகமது யூனுஸ், சீனா சென்றுள்ளார். சீனாவுக்குச் செல்வதற்கு முன்பு அவர் இந்தியாவுக்குச் செல்ல விரும்பினார் என்றும், எனினும், அது தொடர்பான டாக்காவின் கோரிக்கைக்கு "நேர்மறையான" பதில் கிடைக்கப்பெறவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment