Published : 26 Mar 2025 01:10 PM
Last Updated : 26 Mar 2025 01:10 PM

“இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” - யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மாநிலத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முதல்வர் ஆதித்யநாத் அளித்த பேட்டியின் போது அவரிடம் முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர் என்ற அசாதுத்தீன் ஒவைசியின் பேச்சு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆதித்யநாத், “முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை. அவர்களின் (அசாதுதீன் ஒவைசி) வாக்கு வங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்களின் மூதாதையர்களைப் புரிந்து கொள்ளும் நாளில், இதுபோன்றவர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறே வேண்டியது தான். இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரைதான் முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். கடந்த 1947ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. உண்மையை நாம் எப்படி மறக்க முடியும்? பாகிஸ்தானில் ஹிங்லாஜ் மாதா கோவில் இல்லையா? வங்கதேசத்தில் தகேஷ்வரி மாதா கோயில் இல்லை?

நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். அனைத்து மத பழக்க வழக்கங்களையும் சுதந்திரமாக பின்பற்ற முடியும். ஆனால், நூறு முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா, இல்லை. வங்கசேதம் அதற்கு உதாரணம், முன்பு பாகிஸ்தான் அதற்கு உதாரணம். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது. நாம் தாக்கப்படுவதற்கு முன்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் 2017-க்கு முன்பு கலவரம் நடந்திருந்தால், அதில் இந்து கடைகள் எரிந்தால் முஸ்லிம் கடைகளும் எரிந்திருக்கும், இந்து வீடுகள் எரிந்தால் முஸ்லிம் வீடுகளும் எரிக்கப்பட்டிருக்கும். 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு கலவரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான் ஒரு சாதாரண ஒரு குடிமகன், உத்தரப் பிரதேச குடிமகன். நானொரு யோகி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் யோகி. நான் அனைவரின் ஆதரவு மற்றும் வளர்ச்சியை நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத், “உலகின் மிகவும் பழமையான மதம் மற்றும் கலாச்சாரம் சனதானம். அதன் பெயரில் இருந்தே அதை நீங்கள் உணரலாம். சனாதனத்தை பின்பற்றுபவர்கள் யாரும் மற்றவர்களை தன்னுடைய மதத்துக்கு மாற்றுவதில்லை. உலகில் இந்து ஆட்சியாளர்கள் யாரும் தங்களின் பலத்தை பயன்படுத்தி யார் மீதும் ஆதிக்கம் செலுத்திய உதாரணம் இல்லை." இவ்வாறு உத்தரப் பிரதேச முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x