Published : 26 Mar 2025 06:02 AM
Last Updated : 26 Mar 2025 06:02 AM

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2 தமிழர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி

ஆப்பிரிக்க கடல் பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பணியாற்றும் 2 தமிழக இன்ஜினீயர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு ரூபிஸ் எனர்ஜியாண்ட் என்ற சரக்கு கப்பல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ரூபிஸ் எனர்ஜியாண்ட் நிறுவனத்தின் பிட்டு ரிவர் என்ற சரக்கு கப்பல் ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் லோமே நகரில் இருந்து கேமரூன் நாட்டின் டவுலா நகருக்கு சென்று கொண்டிருந்தது.

கடந்த 17-ம் தேதி இரவு 7.45 மணிக்கு மத்திய ஆப்பிரிக்காவின் மேற்கு கடல் பகுதியில் பிட்டு ரிவர் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிநவீன விசைப்படகில் வந்த 5 கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை சிறைபிடித்தனர். இந்த சரக்கு கப்பல் தற்போது காபோன் நாட்டின் ஓவெண்டோ பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கப்பலில் மாலுமிகள் உட்பட 10 பேர் பணியாற்றுகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 இன்ஜினீயர்கள் உட்பட 7 பேர் இந்தியர்கள் ஆவர்.

தமிழ்நாட்டின் தேனி பகுதியை சேர்ந்த லட்சுமண பிரதீப் முருகன், கரூரை சேர்ந்த சதீஷ் குமார் செல்வராஜ், கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த ராஜேந்திரன் பார்கவன், லட்சத்தீவின் மினிகாய் பகுதியை சேர்ந்த ஆசிப் அலி, பிஹாரை சேர்ந்த சந்தீப் குமார் சிங், மகாராஷ்டிராவை சேர்ந்த சோல்கர் ரிகான் ஷபீர், மிர்கா சமீன் ஜாவித் ஆகிய 7 இந்தியர்கள் கப்பலில் உள்ளனர். ரோமேனியாவை சேர்ந்த 3 பேரும் கப்பலில் பணியாற்றுகின்றனர். பத்து பேரும் கப்பலில் சிறைவைக்கப்பட்டு உள்ளனர்.

தேனி பகுதியை சேர்ந்த லட்சுமண பிரதீப் முருகனின் சகோதரர் ராம் பிரவீண் கூறும்போது, “எனது சகோதரர் உட்பட 10 பேரை கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து உள்ளனர். அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், செல்போன்கள், லேப்டாப்புகளையும் அபகரித்து உள்ளனர். பத்து பேரும் கடத்தப்பட்டு இருப்பது குறித்து கப்பல் நிறுவனம் எங்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது. அனைவரையும் உடனடியாக மீட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஆப்பிரிக்க கடல் பகுதியில் கடத்தப்பட்ட பிட்டு ரிவர் என்ற சரக்கு கப்பல், பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த மாரிடெக்டேங்கர்ஸ் என்ற நிறுவனம், பிட்டு ரிவர் சரக்கு கப்பலுக்கு தேவையான ஊழியர்களை வழங்கியிருக்கிறது. இந்த நிறுவனம் மூலமே 2 தமிழர்கள், 2 மலையாளிகள், மகாராஷ்டிராவை சேர்ந்த 2 பேர், பிஹாரை சேர்ந்த 2 பேர் என 7 இந்தியர்கள், சரக்கு கப்பலில் பணியாற்றி வருகின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்படுகிறது. சரக்கு கப்பல் நிறுவனம் சார்பில் கடற்கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 7 இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு சார்பில் ராஜ்ஜியரீதியில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x