Published : 25 Mar 2025 09:10 PM
Last Updated : 25 Mar 2025 09:10 PM
புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று (மார்ச் 25) சந்தித்தார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இரண்டு நாள் பயணமாக அவரது டெல்லி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். டெல்லியில் அமித் ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னணி என்ன? - மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமையலாம் என்று கூறப்படுகிறது. இதனை இபிஎஸ் ஆமோதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சேலத்தில் அண்மையில் இபிஎஸ் அளித்த பேட்டியொன்றில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, “எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதால் தேர்தல் நெருங்கும்போது நாங்களே அழைத்துச் சொல்லுவோம்.” என்று கூறியிருந்தார்.
இதனால் அதிமுக தேர்தலில் பாஜக கூட்டணியை ஏற்படுத்துவதில் திறந்த மனதோடே இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது பாஜக தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாகவும் கூறப்பப்ட்ட நிலையில் தற்போது அமித் ஷாவை சந்தித்துள்ளார்.
ஏற்கெனவே கோவையில் அமித் ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அமித் ஷாவை வேலுமணி சந்தித்தது பரபரப்பானது நினைவுகூரத்தக்கது. அவருடன் இந்த சந்திப்பின் போது அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி-க்கள் உடன் இருந்ததாக தகவல்.
முதல்வர் கோரிக்கை: இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், “சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி சென்றுள்ள அவர் அங்கு யாரை சந்திக்கிறார் என்ற செய்தியும் எங்களுக்கு வந்திருக்கிறது. டெல்லியில் சந்திப்பவர்களிடம் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறுபவர்கள் நாங்கள் அல்ல.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...