Published : 25 Mar 2025 05:41 PM
Last Updated : 25 Mar 2025 05:41 PM
புதுடெல்லி: நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க தமிழக காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர்(ஜாகிர் உசேன் பிஜிலி) பட்டப்பகலில் நான்கு பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் அப்பகுதியில் உள்ள வக்ஃப் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சட்ட வழக்குகள் மூலம் எதிர்த்துப் போராடும் ஒரு ஆர்வலர் என்றும், சிலரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் காவல் துறையினர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இச்செய்தி தொடர்பாக இடம்பெற்ற அம்சங்கள் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். எனவே, இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
2025 மார்ச் 19 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, காவல்துறையினரின் செயலற்ற தன்மை மற்றும் அலட்சியப் போக்கு அவரது கொலைக்கு வழிவகுத்ததாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஆதிக்க சாதியினரால் பட்டியலின மாணவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையும் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவன் ஒருவர் ஆதிக்க சாதி மாணவர்களால் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் தமது தேர்வுக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணித்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளால் அவர் பேருந்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு அரிவாளால் தாக்கப்பட்டதில் அவரது இடது கையில் இருந்து விரல்கள் துண்டிக்கப்பட்டன. இதில் தலையிட முயன்ற சிறுவனின் தந்தையும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்செய்தி தொடர்பாக இடம்பெற்ற அம்சங்கள் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகள் கடுமையான மீறப்பட்டுள்ளதாக ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். எனவே, இது குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
12.03.2025 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவக் குழுவினர் சிறுவனின் விரல்களை மீண்டும் இணைத்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...