Published : 25 Mar 2025 05:13 PM
Last Updated : 25 Mar 2025 05:13 PM
புதுடெல்லி: புதுச்சேரியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தின் ஆவண மையத்தில் 1,800 முதல் 1,900 வரையிலான ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவாத் தெரிவித்தார். இந்த தகவலை, திமுக எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கானப் பதிலில் மக்களவையில் அவர் தெரிவித்தார்.
இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி.யான டி.ரவிக்குமார் இன்று எழுப்பிய கேள்விகளில்,‘புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தில் வரலாற்றுப் பதிவுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் தொகுப்புகள் உள்ளன. இவற்றை, டிஜிட்டல் மயமாக்கி, அவற்றை ஆன்லைனில் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக பதிவேற்றம் செய்ய அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?
புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தை மேலும் மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நுட்பங்களை மேம்படுத்தவும் அரசு எடுத்து வரும் முயற்சிகள் என்ன? அதற்கென அனுமதிக்கப்பட்ட தொகையின் விவரங்களையும், ஆவண மையத்தின் களஞ்சியத்தை விரிவுபடுத்துவதற்காக தனியார் காப்பக சேகரிப்புகள், பனை ஓலை, கையெழுத்துப் பிரதிகள், வரலாற்று ஆவணங்களைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விவரங்களையும் தருக.’ எனக் கேட்டிருந்தார்.
எம்.பி.யின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்த மத்தியக் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியதாவது: இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தில் உள்ள வரலாற்றுப் பதிவுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் காப்பக சேகரிப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி ஏற்கனவே 2024, மார்ச் 28 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு இரண்டு ஆண்டுகளாகும். பாதுகாத்தல், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் பயனர்களுக்கு உதவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தில் உள்கட்டமைப்பும், மையத்தை அறிவியல் முறையில் நவீனமயமாக்கும் பணிகளும் செயல்படுத்தப்படுகின்றன.
ஆராய்ச்சி அறைகள், பாதுகாப்பு அறைகள், டிஜிட்டல் மயமாக்கல் அறைகள், அனைத்து களஞ்சியங்களும் அவ்வப்போது நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தின் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியை என்ஏஐ தொடங்கியுள்ளது.
இவற்றை அபிலேக் படால் ( Abhilek Patal) போர்ட்டலில் பதிவேற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எந்தவொரு பயனரும் மெட்டா தரவைக் கண்டுபிடிக்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கலை நிறைவு செய்வதை என்ஏஐ இலக்காகக் கொண்டுள்ளது.
ஆய்வு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைத்துப் பதிவுகளையும் கேட்டு அபிலேக் படாலின் இணைய போர்ட்டலை அணுகலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment