Published : 25 Mar 2025 04:54 PM
Last Updated : 25 Mar 2025 04:54 PM
புதுடெல்லி: “இரண்டு நிமிட புகழுக்காக அடுத்தவரை அவமானப்படுத்தி, அவர்கள் மீது அவதூறு பரப்ப இவர்கள் யார்?” என ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்த குணால் கம்ராவை பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.
மகராஷ்டிராவைச் சேர்ந்த நையாண்டி கலைஞர் குணால் கம்ரா, தனது நிகழ்ச்சி ஒன்றில் ‘தில் தோஹ் பகல் ஹைய்’ என்ற இந்திப் படத்தின் பிரபலமான பாடலைப் பாடி, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என மறைமுகமாக பகடி செய்திருந்தார். மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிளவுகளையும் கேலி செய்திருந்தார். குணாலின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: வெறும் 2 நிமிட புகழுக்காக சிலர் இவ்வாறு செய்யும் போது இந்தச் சமூகம் எதைநோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வேறு ஒருவரை அவமதிக்கிறீர்கள்.
ஒருவருக்கு அவரின் மரியாதைத் தான் எல்லாமே. நீங்களை அவரை அவமானப்படுத்தி புறக்கணிக்கிறீர்கள். இவர்கள் எல்லாம் யார், இவர்களிடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்களால் எழுத முடியமானால் இலக்கியத்திலும் அதைச் செய்யவேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் மக்களையும் நமது கலாச்சாரத்தையும் அவமதிக்கிறார்கள்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குணாலின் நகைச்சுவை நிகழ்ச்சி நடந்த ஸ்டுடியோவின் ஒரு பகுதியை பிரிஹான் மும்பை மாநகராட்சி இடித்தது குறித்து பற்றிக் கூறும் போது, “சட்டப்படிதான் அந்த இடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், என்னுடைய பங்களா சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது” என்றார்.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் ஆட்சியில், மும்பை மாநகராட்சி பாந்ராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவில் ஒரு பகுதியை சட்டவிரோதமாக கட்டப்பட்டது எனக் கூறி மாநகராட்சி இடித்தது. நடிகர் சுஷாந்த் சிங்-ன் மரணம் தொடர்பாக கங்கனாவுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே நடந்த வார்த்தை போரினைத் தொடந்து அச்சம்பவம் அரங்கேறியது.
இதனிடையே இந்த சர்ச்சை குறித்து தனது மவுனத்தை கலைத்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இங்கே கருத்துச் சுதந்திரம் உள்ளது. நையாண்டியை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த நகைச்சுவைக் கலைஞர் ஒருவருக்கு எதிராக பேசுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது போல தெரிகிறது. இதைக் கருத்துச் சுதந்திரம் எனக் கூறமுடியாது யாருக்காவோ வேலை செய்வது போல இருந்தது.” என்று தெரிவித்திருந்தார்.
அதேநேரம் “எனக்கு எதிராக எடுக்கப்பட்ட எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.” என்று குணால் கம்ரா தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...