Published : 25 Mar 2025 04:11 PM
Last Updated : 25 Mar 2025 04:11 PM

‘ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை’ - நிதியமைச்சர் தகவல்

புதுடெல்லி: நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை. மாநிலங்கள் தணிக்கையாளரின் சான்றிதழை அனுப்பியவுடன், அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டுவிட்டது. நாங்கள் செஸ் வசூலிக்கவில்லை.” என்றார்.

நிதி மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று (மார்ச் 25) தொடங்கியது. விவாதத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகல் 2 மணி முதல் பதிலளித்தார். அப்போது அவர், “2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப சீர்திருத்தங்களைச் செய்வதே பட்ஜெட்டின் நோக்கமாகும். வரி உறுதியை வழங்குவது, வணிகம் செய்வதை எளிதாக்குவது ஆகிய சீர்திருத்தங்களையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்துறைப் பொருட்களுக்கான ஏழு சுங்க வரி விகிதங்களை நாங்கள் நீக்கியுள்ளோம். வரியை 21 சதவீதத்திலிருந்து 8% ஆகக் குறைத்துள்ளோம். எந்தவொரு பொருளுக்கும் செஸ் மற்றும் கூடுதல் வரி விதிக்கப்படாது என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்ய, சில மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஆறு மாதங்களிலிருந்து 1 வருடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பொருட்களின் மீதும் வரிகளை உயர்த்தவில்லை. வருமான வரி விகிதங்களையும் நான் உயர்த்தவில்லை. எரிபொருட்களுக்கான வரி விகிதம் குறித்து தமிழக எம்.பி.க்கள் கேள்வி எழுப்புவார்களேயானால், அவர்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. அவர்கள் தேர்தல் அறிக்கையில் விலை குறைப்பு தொடர்பாக அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்பதே அந்த கேள்வி.

அரிய நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் நோயாளிகளுக்கு ஐஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆராய்ச்சிக்கான இறக்குமதிக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்கள் போன்ற மத ஸ்தலங்களிலிருந்து வரும் பிரசாதங்களுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரசாதங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியைக் குறைப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை. மாநிலங்கள் தணிக்கையாளரின் சான்றிதழை அனுப்பியவுடன், அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டுவிட்டது. நாங்கள் செஸ் வசூலிக்கவில்லை.

செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற 45வது GST கவுன்சில் கூட்டத்தில், சொட்டு நீர் பாசன முறை, டிராக்டர்கள், விவசாய பம்ப் அமைப்புகள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் போன்ற பண்ணை உள்ளீடுகளுக்கான GSTயைக் குறைக்க அதற்கான அமைச்சர்கள் குழு (GoM) பரிசீலித்து வருகிறது. தற்போது விதைகளுக்கு GST கிடையாது. உரங்களுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கையால் இயக்கப்படும் மற்றும் விலங்குகளால் இயக்கப்படும் உபகரணங்களுக்கும் GST கிடையாது.” என தெரிவித்தார்.

அமைச்சரின் விளக்கத்தை அடுத்து நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x