Published : 25 Mar 2025 06:07 AM
Last Updated : 25 Mar 2025 06:07 AM

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை: பிரசாந்த் கிஷோர் கடும் விமர்சனம்

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற காட்டமான விமர்சனத்தை பிரபல அரசியல் வியூக நிபுணரும், ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்து முதன்முதலாக கருத்து தெரிவித்தவர் அவருடன் கூட்டணியில் இருந்த சுஷில் குமார் மோடி. அன்று முதல் பிஹார் அமைச்சர்கள் பலர் நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஆனால், கடந்த ஜனவரி மாதம் வரை அவர் குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்காமல்தான் இருந்துவந்தேன். இந்த நிலையில், பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து மாணவர் நடத்திய போராட்டத்தின்போதுதான் நிதிஷ் குமாரின் மனநிலை மோசமாகிவிட்டதை முதன்முதலில் உணர்ந்தேன். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு சுத்தமாக தெரியவில்லை.

நிதிஷ் குமார் குறித்து நான் மிகையாக எதையும் கூறவில்லை. உங்களுக்கு ஆதாரம் வேண்டும் என்றால் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பெயர்களை அவரிடம் கேட்டுப்பாருங்கள். அப்போது நான் சொல்வது உண்மை என்று தெரியும்.

நிதிஷ் குமார் உடல்ரீதியாக சோர்வடைந்துள்ளதுடன் மனரீதியாக ஆளுகை செய்ய முடியாத நிலையில் உள்ளார். எனவே, அவர் நிர்வாக கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேணடும்.

நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை என்ற விஷயம் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, எனது இந்த குற்றச்சாட்டில் பாஜகவுக்கும் பாதிப் பங்குண்டு. அதிகாரத்தை கைப்பற்ற நிதிஷ்குமாரை அவர்கள் ஒரு முகமூடியாக பயன்படுத்துகின்றனர்.

பதவிக்காலம் முடிவதற்குள் பொது நிதியை தவறாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சமீபத்தில் அவர்கள் அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளனர். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் தேசிய கீதம் பாடப்பட்டபோது பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பக்கத்தில் நின்றிருந்த தலைமைச் செயலாளரிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை கொடுக்க தவறிவிட்டார் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் கூறுகையி்ல், " நிதிஷ்குமாரின் தலைமைத்துவம் வீழ்ச்சியடைந்து வருவதை நிரூபிக்க இதைவிட ஆதாரம் தேவையில்லை" என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x