Published : 25 Mar 2025 05:42 AM
Last Updated : 25 Mar 2025 05:42 AM

மக்களவை தேர்தலுக்கு பிறகு 6 கட்சிகளின் கையிருப்பு ரூ.4,300 கோடி அதிகரிப்பு

கடந்த 2024 மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் திரட்டிய பணத்தை முழுமையாக செலவிடவில்லை. இதனால் பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 6 கட்சிகளின் இருப்பு நிதி தேர்தலின் தொடக்கத்தில் இருந்ததை விட தேர்தலின் முடிவில் ரூ.4,300 அதிகரித்துள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கைகளை காமன்வெல்த் மனித உரிமைகளுக்கான நடவடிக்கை (சிஎப்ஆர்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி பாஜக, தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), சிக்கி்ம் ஜனநாயக கட்சி (எஸ்டிஎப்), அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) ஆகிய 6 கட்சிகளின் இருப்பு நிதி தேர்தலின் தொடக்கத்தில் இருந்தை தேர்தலுக்குப் பிறகு ரூ,4300 கோடி அதிகரித்துள்ளது.

மேலும் பாஜக, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் ஆகிய 5 தேசிய கட்சிகள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ், திமுக, பிஆர்எஸ், தெலங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஐனதா தளம் உள்ளிட்ட 17 பிராந்திய கட்கள் என 22 கட்சிகளின் மொத்த இருப்பு நிதி தேர்தலுக்கு பிறகு 31% அதிகரித்துள்ளது.

இக்கட்சிகளிடம் தேர்தலின் தொடக்கத்தில் ரூ.11,326 கோடி இருந்தது. தேர்தல் செலவுக்காக இக்கட்சிகள் ரூ.7,416 கோடி நிதி திரட்டின. ஆனால் 22 கட்சிகளும் 3,816.6 கோடி மட்டுமே செலவிட்டுள்ளன. இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இக்கட்சிகளின் கையிருப்பு நிதி ரூ.14,848 கோடியாக (31%) அதிகரித்துள்ளது.

இருப்பு நிதி உயர்வில் பாஜக முதலிடத்தில் உள்ளது. இக்கட்சியின் தொடக்க நிதி ரூ.5,921.8 கோடியாக இருந்தது. இக்கட்சி ரூ.6,268 கோடி திரட்டியது. ஆனால் ரூ.1,738 கோடி மட்டுமே செலவிட்டது. இதனால் இருப்பு நிதி 10,107.2 கோடியாக அதாவது ரூ.4,185 கோடி அதிகரித்துள்ளது. இதுபோல் தெலுங்கு தேசம் ரூ.65.4 கோடி, மார்க்சிஸ்ட் ரூ.8 கோடி, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ரூ.9.9 கோடி, எஸ்டிஎப் ரூ.76 லட்சம், ஏஐயுடிஎப்) ரூ.3.6 லட்சம் என பிற கட்சிகளின் இருப்பு நிதியும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 9-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x