Published : 24 Mar 2025 12:32 PM
Last Updated : 24 Mar 2025 12:32 PM
பெங்களூரு: வளமான பாரம்பரியம் கொண்ட தொன்மையான கலாச்சாரம் என்பதால், உலகில் சுமுக சூழலை உருவாக்கும் அனுபவ ஞானம் இந்தியாவுக்கு இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "மனித குல ஒற்றுமை, அனைவருக்கும் நல வாழ்வு எனும் லட்சியத்தை நோக்கி பன்னெடுங்காலமாக ஹிந்து சமுதாயம் மிக நீண்ட, பிரமிப்பூட்டும் பயணத்தில் முனைந்துள்ளது. எத்தனையோ கொந்தளிப்புகளுக்கு மத்தியில், துறவிகள், ஞானிகள், பல புகழ்பெற்ற மாதரசிகள் உள்பட சான்றோர்களின் ஆசியாலும் முயற்சியாலும் நமது தேசம் தொடர்ந்து முன்னேற முடிந்தது.
காலங்காலமாக நமது தேசத்தில் பரவியிருந்த பலவீனங்களை ஒழிக்கவும், ஒருங்கிணைந்த, நற்குணமுள்ள, சக்திவாய்ந்த தேசமாக பாரதத்தை உருவாக்கி, உலகின் தலைசிறந்த நாடாக்கவும் 1925 ல் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை துவக்கினார். மனித நிர்மாணம் எனும் சங்கத்தின் முக்கிய பணி நிறைவேற தினசரி ஷாகா வடிவில் தனித்துவமான முறையை ஏற்படுத்தினார். தேசத்தின் தொன்மையான பாரம்பரியத்துக்கு, பண்பாட்டுக்கு இசைவான தேச நிர்மாணம் எனும் தன்னலமற்ற தவமாக அது உருவெடுத்தது. அவரது வாழ்நாளிலேயே இந்த முன்னெடுப்பு நாடு முழுதும் பரவியது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி (மாதவ சதாசிவ கோல்வல்கர்) அவர்களின் தொலைநோக்கு வாய்ந்த தலைமையில், என்றும் நிலைத்த தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு தேசிய வாழ்வின் பல்வேறு துறைகளில் சமகால சூழலுக்கு ஏற்ப, செயல்முறைகளை உருவாக்கும் பணி தொடங்கியது.
இந்த நூறாண்டுப் பயணத்தில், தினசரி ஷாகா தரும் நற்பண்பு காரணமாக சமுதாயத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் அன்பையும் பெற்றுள்ளது சங்கம். இந்த காலகட்டத்தில் சங்க ஸ்வயம்சேவகர்கள், மதிப்பு-அவமதிப்பு, விருப்பு - வெறுப்பு இவற்றை கடந்து, அன்பால், பாசத்தால் உருவாகும் ஆற்றல் கொண்டு அனைவரையும் அரவணைத்து இணைக்க முயற்சித்துள்ளனர். சங்கம் சந்தித்த பல்வேறு சவால்களை எதிர்கொள்ள ஆதரவு, நல்லாசி வழங்கிய துறவிகளையும், சான்றோர்களையும் (சஜ்ஜன் சக்தி), அத்துடன் தன்னலம் பாராது சங்கப்பணிக்கே வாழ்க்கையை அர்ப்பணித்த சங்க ஸ்வயம்சேவகர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவரது பங்களிப்பையும், சங்கத்தின் நூறாவது ஆண்டில் நினைவுகூர்வது நமது கடமையாகும்.
வளமான பாரம்பரியம் கொண்ட தொன்மையான கலாச்சாரம் என்பதால், பாரதம் உலகில் சுமுக சூழல் உருவாக்கும் அனுபவ ஞானம் வாய்ந்துள்ளது. முழு மனித குலத்தையும் பிளவு சக்திகளிடமிருந்தும் சுய அழிவுப் போக்கிலிருந்தும் நமது சிந்தனை பாதுகாக்கிறது; உயிர்ப்புள்ள, சடமான அனைத்தின் ஆன்மநேய ஒருமையுணர்வையும் அமைதியையும் உறுதி செய்கிறது.
தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, தன்னம்பிக்கை நிறைந்த, ஒருங்கிணைந்த கூட்டு வாழ்க்கையின் ஆதாரத்தில்தான் ஹிந்து சமுதாயம் தனது உலகளாவிய பொறுப்பை திறம்பட நிறைவேற்ற முடியும் என்று சங்கம் நம்புகிறது. எனவே, அனைத்து வித பாரபட்சங்களையும் நிராகரித்து, இணக்கமான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒரு முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையின் அடிப்படையில் பண்பான குடும்பங்களை ஊக்குவிக்கவும், தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை, குடிமக்களுக்குரிய கடமைகளை சரிவர பின்பற்றும் சமுதாயத்தை, தன் சுயம் உணர்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் ஆர்.எஸ்.எஸ். உறுதி பூணுகிறது. சமுதாயம் சந்திக்கும் சவால்களை முறியடித்து, அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, ஆன்மிகத்தில் தோய்ந்த, சுபிட்சமான, வலுவான தேசிய வாழ்க்கையை நாம் உருவாக்க இது உதவும்.
சான்றோர்களின் தலைமையின் கீழ் முழு சமுதாயத்தையும் ஒன்றிணைத்து, இணக்கமான, ஒன்றிணைந்த பாரதத்தை உலகிற்கு ஒரு முன்மாதிரி தேசமாக முன்வைக்க அகில பாரத பிரதிநிதி சபை உறுதி பூணுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...