Published : 24 Mar 2025 05:30 AM
Last Updated : 24 Mar 2025 05:30 AM

மணிப்பூரில் அமைதியை சீர்குலைக்க முயற்சி: மைதேயி குழு நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல்

மணிப்பூரில் அமைதியை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள் மீது மற்றொரு குழு கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது என்று மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மைதேயி, குகி ஆகிய இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

கடந்த பிப்ரவரியில் மாநில முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார். தற்போது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் அஜய் பல்லா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக மைதேயி, குகி சமுதாயங்களில் செயல்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. இரு தரப்பிலும் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மைதேயி சமுதாயத்தை சேர்ந்த யுஎன்எல்எப் ((பி) என்ற கிளர்ச்சிக் குழு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது.

இந்த குழுவின் மூத்த நிர்வாகி நந்தகுமார் சிங் (56) என்பவரின் வீடு, மணிப்பூரின் கோங்பால் தாங் நகரில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் யுஎன்எல்எப் (பி) தொண்டர்கள் நேற்று முன்தினம் குழுமியிருந்தனர்.

அப்போது சுமார் 20 பேர் கொண்ட கும்பல், நந்தகுமார் சிங்கின் வீட்டில் நுழைந்து யுஎன்எல்எப் (பி) தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் நந்தகுமார் சிங் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து மணிப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸாரை பார்த்ததும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் 4 பேரை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் 12-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. அப்போது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அங்கு விரைவில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதுகுறித்து மணிப்பூர் போலீஸார் கூறியதாவது: மணிப்பூரில் அமைதியை சீர்குலைக்க சில குழுக்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட யுஎன்எல்எப் (பி) நிர்வாகிகள் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. முதல் கட்ட விசாரணையில் மைதேயி சமுதாயத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற கிளர்ச்சிக் குழு தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த குழுவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்து உள்ளோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த், விக்ரம்நாத், சுந்தரேஷ், விஸ்வநாதன், கோட்டீஸ்வர் அடங்கிய குழு அந்த மாநிலத்துக்கு நேற்று முன்தினம் சென்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை, நீதிபதிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மணிப்பூரின் சட்டம், ஒழுங்கு நிலவரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் களஆய்வு செய்தனர். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x