Published : 23 Mar 2025 05:18 PM
Last Updated : 23 Mar 2025 05:18 PM

நாக்பூர் வன்முறை - 6 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ்

நாக்பூர்: மகாராஷ்டிராவின் மத்திய நாக்பூரில் வன்முறை நடந்து ஆறு நாட்களுக்குப் பின்பு மீதமுள்ள நான்கு இடங்களில் இருந்தும் ஊரடங்கு இன்று திரும்பப் பெறபட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் எனக்கோரி விஹெச்பி மற்றும் பஜ்ரங் தளம் தலைமையில் வலதுசாரி அமைப்புகள் மார்ச் 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் புனித எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சதார் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து மத்திய நாக்பூர் பகுதிகளில் அன்று இரவு வன்முறை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோட்வாலி, கணேஷ்பேத், தேஹ்சில், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்திநகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் காவல்நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மார்ச் 20-ம் தேதி நந்தன்வன் மற்றும் கபில்நகர் காவல்நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 22-ம் தேதி பச்பாலி, சாந்தி நகர், லகட்கஞ்ச், சக்கர்தாரா மற்றும் இமாம்பாடா காவல்நிலையப் பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்பட்டது.

இதனிடையே, நாக்பூர் காவல் ஆணையர் ரவிந்தர் சிங்கால் மீதமுள்ள கோச்வாலி, தேஹ்சில், கணேஷ்பேத் மற்றும் யசோதரா காவல்நிலையப் பகுதிகளில் அமலில் இருந்த ஊரடங்கை இன்று பிற்பகல் 3 மணி முதல் நீக்க உத்தரவிட்டார். என்றாலும் பதற்றமான பகுதிகளில் உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் ரோந்து பணிகள் தொடரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மார்ச் 17 அன்று நடந்த வலதுசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் சதார் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து நாக்பூரின் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கல்வீச்சு மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் நடந்தன. அந்த வதந்தி ஆதாரமற்றது என்றும் அது வேண்டுமென்றே பரப்பப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாக்பூர் வன்முறையில் மூன்று இணை ஆணையருக்கு நிகரான அதிகாரிகள் உட்பட 33 காவல்துறையினர் காயம் அடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக போலீஸார் இதுவரை 100க்கும் அதிகமானவர்களைக் கைது செய்துள்ளனர்.

இதனிடையே மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை கூறுகையில், "சமீபத்திய நாக்பூர் வன்முறையின் போது சேதமான பொருள்களுக்கான தொகைகள் வன்முறையாளர்களிடம் இருந்து இழப்பீடாக வசூலிக்கப்படும். தேவைப்பட்டால் புல்டோசர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

வன்முறையாளர்கள் இழப்பீடு தரத் தவறினால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதனை விற்று அந்த தொகை ஈடுகட்டப்படும். வன்முறையின் போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x