Published : 23 Mar 2025 07:27 AM
Last Updated : 23 Mar 2025 07:27 AM
சத்தீஸ்கரில் சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு உணவு, தங்குமிடம், திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில உள் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதை ஒழிக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புப் படையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை 2 வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்ட்டரில் 30 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார்.
மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தாமாக முன்வந்து சரணடைவோருக்கு மாநில அரசு மறுவாழ்வு வழங்கி வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரணடையும் மாவோயிஸ்ட்களுக்காக புதிய மறுவாழ்வு கொள்கை அமல்படுத்தப்படும். இதன்படி, சரணடைபவர் உண்மையிலேயே மாவோயிஸ்ட்தானா என்பதை உறுதி செய்ய மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும். அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். இதுதவிர, செலவுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ரொக்கம், வேலைக்கு செல்ல ஏதுவாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நிலம் மற்றும் வீடு வழங்கப்படும்.
மேலும் ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படும். குழுவினராக சரணடைந்தால் இரட்டிப்பு வெகுமதி வழங்கப்படும். மாவோயிஸ்ட் இல்லாத கிராமம் என அறிவிவிக்கப்பட்டால், அங்கு செல்போன் நெட்வொர்க், மின்சார வசதி உள்ளிட்டவை செய்து தரப்படும்.
மாவோயிஸ்ட் வன்முறை காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும். மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் புலம் பெயர்ந்தவர்களுக்கு நிதியுதவி மற்றும் நிலம் வழங்கப்படும். நாட்டிலேயே மிகவும் சிறந்த கொள்கையாக இது இருக்கும். இதன்மூலம் மாவோயிஸ்ட் அமைப்பில் இருப்பவர்கள் அதிக அளவில் சரணடைய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment