Published : 22 Mar 2025 05:10 AM
Last Updated : 22 Mar 2025 05:10 AM
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 34 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது.
உ.பி.யின் பிரயாக்ராஜில் 1976-ல் தேசிய அளவில் தொடங்கப்பட்டது பாஷா சங்கம். இந்தி, பெங்காலி, மராட்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் பேசுவோர் இதன் உறுப்பினர்கள் ஆவர். இந்த சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனரும், மறைந்த பொதுச் செயலாளருமான கிருஷ்ணசந்த் கவுடுவினால் 1990-ல் தொடங்கி பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என கோரப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கான உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இவற்றில் ஆன்மிக வடிவங்களான பிரம்மா, கருடா, அறிஞர்களான வால்மீகி, ரவீந்திரநாத் தாகூர், மன்னர்களான ஹர்ஷவர்தன், அகல்யாபாய் ஹோல்கர் உள்ளிட்டோருக்கு என 15 சிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் பிரயாக்ராஜ் டிஐஜியான தமிழர் என்.கொளஞ்சியின் முயற்சியால் இந்தப் பட்டியலில் திருவள்ளுவர் சிலையும் சேர்க்கப்பட்டு, கும்பமேளாவின்போது நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் 34 ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கள்ளக்குறிச்சி தமிழரான என்.கொளஞ்சி கூறும்போது, "நான் பிரயாக்ராஜில் பணியமர்ந்தவுடன் இங்கு திருவள்ளூர் சிலைக்கான முயற்சி நடைபெறுவது தெரியவந்தது. இது தொடர்பாக உ.பி. அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுக்களின் விவரமும் கிடைத்தது. இதனை நான் உகந்த நேரத்தில் ஆலோசனையில் சுட்டிக்காட்டியது ஏற்கப்பட்டது. திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றி நமது பிரதமர் தொடர்ந்து பேசுவதையும் எடுத்துரைத்தது பலன் அளித்தது. உ.பி.யில் முதலாவதாக திருவள்ளுவர் சிலை வைத்தாகி விட்டது. இனி அவரது குறள்களின் கருத்துகளை வேகமாகப் பரப்ப வேண்டும் என்பது இம்மாநில தமிழ் அதிகாரிகளின் விருப்பம்" என்றார்.
இந்த சிலை விவகாரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 9 ஆண்டுகளாக செய்தி வெளியானது. இதனால், புதிய சிலை வாங்குவது குறித்து, மகா கும்பமேளா அரசு கமிட்டியின் இயக்குநர் ரோஹித் ராணா, இந்து தமிழை தொடர்பு கொண்டார். ஒரு வாரத்தில் சிலை தேவை எனவும் வலியுறுத்தினார். இதற்கேற்றபடி, தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் மூலமாக மகாபலிபுரத்தில் தயாராக இருந்த சுமார் 2 டன் சிலை தேர்வானது. இச்சிலை தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஜனவரி 13-ல் பிரயாக்ராஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சிலைக்கான செலவை உ.பி. அரசே ஏற்றது.
பாஷா சங்கத்தில் 2010 முதல் 11 வருடம் பொதுச் செயலாளராக இருந்தபோது இச்சிலை நிறுவ தீவிர முயற்சி செய்த இந்தி, தமிழ் மொழி அறிஞர் எம்.கோவிந்தராஜன் கூறும்போது, "நமது கோரிக்கையை ஏற்று திரிவேணி சங்கமத்தின் தென்கரை சாலைக்கு ஜுலை 2017-ல் திருவள்ளுவர் மார்க் எனப் பெயரிட்டபோதிலும் திருவள்ளுவர் சிலைக்கான தடைகள் தொடர்ந்தன. இதை அகற்ற, டிஐஜி கொளஞ்சியுடன், இந்து தமிழும் முக்கியப் பங்காற்றி சிலை நிறுவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலை அறிமுகத்திற்காக விரைவில் பாஷா சங்கம், பிரயாக்ராஜில் விழா எடுக்கும்" என்றார்.
பிரயாக்ராஜில் 9 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானது ஆங்கிலேயர் காலத்தின் லீடர் ரோடிலுள்ள பிரயாக்ராஜ் ஜங்ஷன் ரயில் நிலையம். இங்கு வந்து இறங்கும் பயணிகளை வரவேற்கும் வகையில் எதிரிலுள்ள நாற்சந்தியில் திருவள்ளுவர் சிலை கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது. சிற்பி பாலகிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை 5 அடி உயரம், 4 அடி அகலம் கொண்டது. சிலையை அமைத்த உ.பி. அரசின் பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணையமே அதனை பராமரிக்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment