Published : 21 Mar 2025 06:16 PM
Last Updated : 21 Mar 2025 06:16 PM

ஹனி டிராப் விவகாரத்தால் கர்நாடக பேரவையில் அமளி - 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதம் இடைநீக்கம்

இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ-க்களில் ஒருவரான முன்னாள் துணை முதல்வர் சி.என். அஸ்வத் நாராயண்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஹனி டிராப் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களை பயன்படுத்தி ஒருவரை பாலியல் சர்ச்சையில் சிக்க வைக்க நடக்கும் முயற்சி ‘ஹனி டிராப்’ எனப்படுகிறது. இத்தகைய ஹனி டிராப் வலையில் சிக்குவதால் அரசியல் பிரமுகர்கள் பலர், தங்களின் அரசியல் எதிர்காலத்தை தொலைத்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நேற்று பேசிய அம்மாநில கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா, "எனக்கு எதிராக ஹனி டிராப் முயற்சி நடந்தது. நான் மட்டுமல்ல, தேசிய தலைவர்கள், நீதிபதிகள் உள்பட கர்நாடகாவில் கிட்டத்தட்ட 48 முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக ஹனி டிராப் முயற்சி நடந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதில் சிக்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறி இருந்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று காலை சட்டமன்றம் கூடியதும், எதிர்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏக்கள் இந்த விவகாரத்தை அவையில் எழுப்பி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், ஹனி டிராப் நடந்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகக் கூறி தங்கள் கைகளில் இருந்த சிடிகளை சில உறுப்பினர்கள் காண்பித்தனர். மேலும், சபாநாயகரை முற்றுகையிட்டு அவர்கள், பேப்பர்களை கிழித்து சபாநாயகர் காதர் மீது வீசினர்.

ஹனி டிராப் விவகாரம் குறித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, "இது ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல. மக்களுக்காக உழைக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான மிகப் பெரிய சதி இது. சிலர் உள்நோக்கத்துடன் இத்தகைய ஹனி டிராப் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எனவே, இது தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் சித்தராமையா, "ஹனி டிராப்பில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கே.என்.ராஜண்ணாவின் குற்றச்சாட்டுகளுக்கு உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஏற்கெனவே பதிலளித்துள்ளார். தனக்கு எதிராக ஹனி டிராப் வலையை விரித்தவர் யார் என்பது குறித்து ராஜண்ணா சொல்லவில்லை. அவர் புகார் அளித்தால் அதன் அடிப்படையில் உயர் மட்ட விசாரணை நடத்தப்படும். அவர் யாரையாவது குறிப்பிட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும். வழக்கில் யாரையும் பாதுகாப்பது என்ற கேள்விக்கே இடமில்லை," என்று கூறினார்.

முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே, பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு பேப்பரை கிழித்து அவர் மீது வீசினர். பாஜக எம்எல்ஏக்களின் இந்த செயலுக்கு ஆளும் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இது சட்டமன்ற ஒழுங்கை மீறும் செயல் என்றும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், சபாநாயகரை முற்றுகையிட்டு அவர் மீது பேப்பர்களை கிழித்துப் போட்ட விவகாரத்தில் 18 பாஜக எம்எல்ஏக்களை இடை நீக்கம் செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்: முன்னாள் துணை முதல்வர் சி.என். அஸ்வத் நாராயண், முன்னாள் அமைச்சர்கள் பைரதி பசவராஜு, முனிரத்னா. தொட்டனகவுடா பாட்டீல், எஸ்.ஆர். விஸ்வநாத், சன்னபசப்பா, எம்.ஆர்.பாட்டீல், சுரேஷ் கவுடா, ஷரனு சலாகர், சைலேந்திர பெல்டேல், சி.கே. ராமமூர்த்தி, யஷ்பால் சுவர்ணா, பி.பி. ஹரிஷ், ஒய். பாரத் ஷெட்டி, சந்துரு லாமணி, தீரஜ் முனிராஜு, உமாநாத் கோட்டியன் மற்றும் பசவராஜு மதிமோட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x