Last Updated : 01 Jul, 2018 03:46 PM

 

Published : 01 Jul 2018 03:46 PM
Last Updated : 01 Jul 2018 03:46 PM

காங், கோரிக்கை சாத்தியமில்லை: பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரி ஜிஎஸ்டியில் முடியாது: பிரதமர் மோடி பளீர் பேச்சு

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையான நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக ஜிஎஸ்டி வரி சாத்தியமில்லை. பாலுக்கும், மெர்சடிஸ் பென்ஸ்காருக்கும் 18 சதவீத வரி விதிக்கமுடியுமா என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலுக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு ஜுலை1-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நாளை மத்தியில் ஆளும் பாஜக அரசு, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் ஜிஎஸ்டியை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்து ஒரு ஆண்டு நிறைவையொட்டி, சுயராஜ்யம் இணையதளத்துக்குப் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து வரிமுறையில் வரலாற்று மாற்றங்களைச் செய்துள்ளது. நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவைவரியை அறிமுகம் செய்து ஒரு ஆண்டை நிறைவு செய்திருக்கிறோம். ஒரு ஆண்டில் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. 17 வரிகள், 23 கூடுதல்வரிகள் இணைக்கப்பட்டு ஒரேவரியாக மாற்றப்பட்டுள்ளன.

உற்பத்தி வரி, சேவை வரி, வாட் வரி ஆகியவை அகற்றப்பட்டு, எளிமையான மறைமுகவரி அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழித்திருக்கிறோம்.

ஜிஎஸ்டி வரியில் ஒரு மாதிரியான வரிவிதிப்பு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள நண்பர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். அதை ஏற்கிறோம். நான் கேட்கிறேன், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலுக்கும், பணக்காரர்கள் பயன்படுத்தும் மெர்சடீஸ் பென்ஸ் காருக்கும் ஒரேமாதிரியான வரிவிதிக்க முடியுமா.

நாங்கள் ஜிஎஸ்டி வரியில் உணவுப்பொருட்கள் பலவற்றுக்கு வரியின்றி, சிலவற்றுக்கு 5 சதவீதமும், சில பொருட்களுக்கு 18சதவீதமும் விதித்துள்ளோம். அனைத்து உணவுப்பொருட்களுக்கும் ஒரேமாதிரியான வரி விதிக்கவில்லை.

சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 66 லட்சம் வரிசெலுத்துவோர்தான் இருந்தனர். ஆனால், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 48 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர்.

இதுவரை 350க கோடி இன்வாய்ஸ், 11 கோடி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையைப் பார்த்தால், ஜிஎஸ்டி வரி குழப்பமானதாகத் தெரிகிறதா.

மாநில எல்லைகளில் இருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லைகளில் வாகனங்கள் வரிசையாக நிற்கத்தேவையில்லை. இதனால், லாரி ஓட்டுநர்களின் நேரம் மிச்சமாக்கப்பட்டுள்ளது. பொருட்களை உரியநேரத்தில் கொண்டு சேர்க்க முடியும், நாட்டின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இதற்கு முன் இருந்த 17வரிகள், 23கூடுதல்வரிகளை இணைத்து ஒருவரியாக மாற்றி எளிமையாக்கியுள்ளோம். 400 வகையான பொருட்களின் வரியை குறைத்துள்ளோம். 150 வகையான பொருட்களுக்கு வரியை நீக்கியுள்ளோம். இதனால், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பலபொருட்களின் விலை குறைந்துள்ளது.

குறிப்பாக அரிசி, சர்க்கரை, வாசனைமளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் வரி குறைக்கப்பட்டுள்ளது.

அன்றாடம் அதிகமாக மக்கள் பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் வரியை 5 சதவீத வரிக்குள் கொண்டுவந்து இருக்கிறோம். 95 வகையான பொருட்களுக்கான வரியை 18 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x