Last Updated : 21 Mar, 2025 05:01 AM

 

Published : 21 Mar 2025 05:01 AM
Last Updated : 21 Mar 2025 05:01 AM

தங்க கடத்தல் வழக்கில் கைதான‌ நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு செய்தி வெளியிட தடை

தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், அவரது வளர்ப்பு தந்தை டிஜிபி ராமசந்திர ராவ் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ரன்யா ராவின் தங்க கடத்தலுக்கு அவரது வளர்ப்பு தந்தை ராமசந்திர ராவ் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியானது. அவரது போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி ரன்யா ராவ் விமான நிலையத்தில் சோதனை வளையத்தில் இருந்து தப்பியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து கர்நாடக குற்றப்பிரிவு போலீஸார் ராமசந்திர ராவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் ரன்யா ராவின் வளர்ப்பு தாய் ரோஹினி பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''நடிகை ரன்யா ராவ் மற்றும் அவரது வளர்ப்பு தந்தை டிஜிபி ராமசந்திர ராவ் குறித்து ஊடகங்கள் அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றன. இதனால் இருவருக்கும் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் குடும்ப மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே ஊடகங்கள் அவதூறு செய்திகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அவதூறான செய்தி வெளியிட்ட 32 ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''என கோரினார். இதையடுத்து குடிமையியல் நீதிமன்றம், ஜூன் 2ம் தேதி வரை நடிகை ரன்யா ராவ் அவதூறு செய்திகளை வெளியிடுவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே ரோகினி கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் இதே மனுவை தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ''ரன்யா ராவ், ராமசந்திர ராவ் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அவர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்ட 32 ஊடக நிறுவனங்களும் 2 வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்''என உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கு ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x