Published : 20 Mar 2025 05:28 PM
Last Updated : 20 Mar 2025 05:28 PM

தொகுதி மறுவரையறைக்கு எதிரான ‘டி-ஷர்ட்’ சலசலப்பு முதல் டி.ஆர்.பாலு ஆவேசம் வரை: நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாராக இல்லை என்று மக்களவை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் நேற்றும் இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக #FairDelimitation என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்திருந்தனர். மேலும் அதில், தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்பதைக் குறிக்கும் ‘Tamil Nadu will fight, Tamil Nadu will win’ எனும் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து, இதே டி ஷர்ட்டுடன் அவர்கள் அவைக்குச் சென்றனர். மக்களவை எம்.பி.,க்களின் இந்த டி-ஷர்ட் வாசகங்களைப் பார்த்த சபாநாயகர் ஓம் பிர்லா, வாசகங்கள் எழுதப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து வருவது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்று கூறினார். மேலும் அவர், “விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் சபை செயல்படுகிறது. உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தையும் மரியாதையையும் பராமரிக்க வேண்டும். சில எம்.பி.க்கள் விதிகளைப் பின்பற்றாமல் கண்ணியத்தை மீறுகிறார்கள், இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறி, அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.

அப்போது திமுக எம்பிக்கள், தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படாததால் தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று கூறி கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இதேபோல், மாநிலங்களவையிலும் டி-ஷர்ட் விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக, நாடாளுமன்றக் குழு தலைவர்கள் தன்னை தனது அலுவலகத்தில் சந்திக்க அழைப்பு விடுத்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவையை நண்பகல் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். மீண்டும் 12.15 மணிக்கு அவைக்கு வந்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

வாசங்கள் எழுதப்பட்ட டி-ஷர்ட் அணியாமல் அவைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, "தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாராக இல்லை. இதன் மூலம் அவர்தான் பிரச்சினையை உருவாக்குகிறார். உடை நாகரிகம் குறித்து சபாநாயகர் பேசினார். ஆனால், அவை நடைமுறையில் உடை கட்டுப்பாடு எதுவும் கிடையாது. நாளையும் நாங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என கூறினார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், "தொகுதி மறுவரையறை குறித்த தனது அறிக்கையை தெளிவுபடுத்துமாறு மத்திய அரசிடம், குறிப்பாக உள்துறை அமைச்சரிடம் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை மேற்கொள்ளப்படக் கூடாது.

தொகுதி மறுவரையறை தொடர்பான போராட்டத்தின் அடையாளமாக, எங்கள் கூட்டணிக் கட்சியினரும் எங்கள் கட்சி உறுப்பினர்களும் நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்ற கோரிக்கையைத் தாங்கிய டி ஷர்ட்டை அணிந்துள்ளனர். இந்த டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு சபைக்குள் செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. சபைக்குள் டி ஷசர்ட்டை அணிய முடியாது என்று சபாநாயகர் கூறினார்" என தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "மக்களவையாக இருந்தாலும் சரி, மாநிலங்களவையாக இருந்தாலும் சரி, அவை அரசியலமைப்பு மற்றும் விதிகளின்படி இயங்குகிறது. அவை தங்கள் விதிமுறைப்படி செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. தொகுதி மறுவரையறை தங்கள் விதிமுறைப்படி செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஏற்ப சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x