Published : 03 Jul 2018 08:26 AM
Last Updated : 03 Jul 2018 08:26 AM
டெல்லி புராரி வீட்டில் இறந்து கிடந்த 11 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டன. அதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை. மத நம்பிக்கையில் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாராயண் தேவி (77) என்ற மூதாட்டி ஒரு அறையில் தரையில் இறந்து கிடந்தார். இவரது மகள் பிரதிபா (57), மகன்கள் பாவ்னேஷ் (50), லலித் பாட்டியா (45). பாவ்னேஷின் மனைவி சவீதா (48), இவர்களுடைய குழந்தைகள் மீனு (23), நிதி (25), துருவ் (15). லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவர்களுடைய மகன் சிவம் (15). தவிர பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவர்கள் 10 பேரும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். இதில் பிரியங்காவுக்கு கடந்த மாதம்தான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த ஆண்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் டெல்லியில் நேற்றுமுன்தினம் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த போலீஸார் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:
வீட்டில் இறந்து கிடந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு விட்டன. அதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை. அவர்கள் உயிருக்குப் போராடியதாக எந்தத் தடயமும் இல்லை. ஆனால், நாராயண் தேவி மட்டும் உயிருக்கு போராடியதாகத் தெரிகிறது. வீட்டில் சில கடிதங்கள், டைரி கிடைத்தன. அவற்றில் உள்ள தகவல்களை வைத்து பார்க்கும்போது அனைவரும் மரணத்துக்கு முன்கூட்டியே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மத நம்பிக்கையில் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. நேரடியாக அனைவரும் மோட்சம் அடையலாம் என்று யாராவது தூண்டி விட்டார்களா, அவர்கள் அறிவுரைகளைப் பின்பற்றி அனைவரும் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். தூக்கில் இறந்து கிடந்த 10 பேரின் வாய்களும், துணியால் கட்டப்பட்டிருந்தன. அவர்களுடைய முகங்களும் மூடப்பட்டிருந்தன.
தவிர 11 பேர் இறந்து கிடந்த வீட்டுச் சுவரில் மர்மமான முறையில் 11 குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தண்ணீர் செல்வதற்கான இணைப்பும் இல்லை. அவை வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள காலி நிலத்தைப் பார்த்தபடி பதிக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் இருந்து சுவருக்கு வெளியில் குழாய்கள் சிறிதளவே துருத்திக் கொண்டுள்ளன. எல்லா குழாய்களும் அருகருகில் உள்ளன. மேலும், 4 குழாய்கள் சுவரில் இருந்து நேராக உள்ளன. 4 குழாய்கள் வளைந்து காணப்படுகின்றன. இந்தக் குழாய்கள் எதற்காகப் பதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் உயரதி காரி கூறினார்.
ஆனால், அமானுஷ்ய சக்திக்காக அந்தக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. மேலும் லலித் பாட்டியா விபத்தில் சிக்கி வாய்ப் பேச முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு குடும்பத்தினர் அதீத மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நாராயண் தேவிக்கு இன்னொரு மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் வெளியில் வசிக்கின்றனர். அவர்கள் தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT