Published : 20 Mar 2025 12:16 PM
Last Updated : 20 Mar 2025 12:16 PM
சென்னை: ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரில், காசா மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு மரணத்துக்கான ஒரே ஒரு வழி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது என்று ப. சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை (18-3-2025) அன்று இஸ்ரேல் படைகள் தொடங்கிய தாக்குதல்களை தொடங்கியதிலிருந்து 183 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உட்பட குறைந்தது 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 678 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த முட்டாள்தனமான கொலைகளின் நோக்கம்தான் என்ன? இது போரை முடிவுக்குக் கொண்டுவருமா? இது அமைதியைக் கொண்டுவருமா? ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரில், காசா மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது - அது மரணத்திற்கான வழி.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்க காசாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை(IDF) தொடர்ந்து செயல்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. ஐடிஎஃப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுவதற்கான ஏற்பாடுகளை ஹமாஸ் மேற்கொண்டது. எனினும், ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் ராணுவ தளத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நேற்றிரவு தாக்கியது.
மேலும், காசாவின் கடலோரப் பகுதியில் இஸ்ரேலிய கடற்படை, பல கப்பல்களைத் தாக்கியது. இந்தக் கப்பல்கள் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட இருந்தன.
பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும், மத்திய மற்றும் தெற்கு காசாவில் இலக்கு வைக்கப்பட்ட தரைவழி நடவடிக்கைகளையும் ஐடிஎஃப் தொடங்கியது. தரைவழி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, துருப்புக்கள் தங்கள் கட்டுப்பாட்டை நெட்சாரிம் பகுதியைச் சுற்றிலும் மேலும் விரிவுபடுத்தினர்.
இஸ்ரேல் நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்க காசாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஐடிஎஃப் தொடர்ந்து செயல்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தாக்குதலில் பிடித்துச் செல்லப்பட்ட மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்காவிட்டால், நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கைகள் பல கட்டங்களாக, பல விதமாக கொடுக்கப்பட்ட நிலையில், பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் எந்த முன்னேற்றமும் காட்டாததைச் சுட்டிக் காட்டி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...