Published : 20 Mar 2025 05:06 AM
Last Updated : 20 Mar 2025 05:06 AM
புதுடெல்லி: நாட்டின் 28 மாநிலங்களை சேர்ந்த 4.092 எம்எல்ஏக்கள் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாய சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பராக் ஷா, சுமார் ரூ.3,400 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக திகழ்கிறார். இதையடுத்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் கனகபுரா தொகுதி எம்எல்ஏ ஆவார்.
இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் மேற்கு வங்கத்தின் இண்டஸ் தொகுதி பாஜக எம்எல்ஏ நிர்மல் குமார் தாரா உள்ளார். இவர் தன்னிடம் வெறும் ரூ.1,700 மட்டுமே இருப்பதாக பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.
பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (ரூ.931 கோடி சொத்துகள்), ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி (ரூ.757 கோடி) ஆகிய முக்கிய தலைவர்களும் உள்ளனர்.
மேலும் இதில் கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ புட்டசுவாமி கவுடா (ரூ.1,267 கோடி), கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரியா கிருஷ்ணா (ரூ.1,156 கோடி), ஆந்திர தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் பி.நாராயணா (ரூ.824 கோடி), பிரசாந்தி ரெட்டி (ரூ.716 கோடி) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டின் முதல் 10 பணக்கார எம்எல்ஏக்களில் 4 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மேலும் முதல் 20 பணக்கார எம்எல்ஏக்களில் அமைச்சர் நாரா லோகாஷ், இந்துபூர் எம்எல்ஏ என்.பாலகிருஷ்ணா உள்ளிட்ட 7 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
மாநில எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு என்று கணக்கிட்டால் கர்நாடகாவின் 223 எம்எல்ஏக்களும் மொத்தம் ரூ.14,179 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இதையடுத்து மகாராஷ்டிராவின் 286 எம்எல்ஏக்கள் ரூ.12,424 கோடி சொத்துகளுடன் இரண்டாம் இடத்திலும் ஆந்திராவின் 174 எம்எல்ஏக்கள் ரூ.11,323 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, மிகக் குறைந்த மொத்த சொத்துகளை கொண்ட மாநிலங்களாக திரிபுரா, மணிப்பூர், புதுச்சேரி உள்ளன.
திரிபுராவின் 60 எல்எல்ஏக்கள் மொத்தம் ரூ.90 கோடி சொத்து வைத்துள்ளனர். மணிப்பூரின் 59 எம்எல்ஏக்கள் ரூ.222 கோடியும் புதுச்சேரியின் 30 எம்எல்ஏக்கள் ரூ.297 கோடியும் சொத்து வைத்துள்ளனர்.
24 எம்எல்ஏக்களின் பிரமாண பத்திரம் படிக்க முடியாத வகையில் இருந்ததால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதுபோல் 7 காலியிடங்களும் ஆய்வில் சேர்க்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...