Published : 19 Mar 2025 05:40 PM
Last Updated : 19 Mar 2025 05:40 PM
புதுடெல்லி: மும்மொழிக் கொள்கையின் கீழ் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொழிகளை மாநில அரசுகளும், மாணவர்களுமே முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்று செயல்படும் மத்திய, மாநில, யூனியன் பிரதேச, உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படக்கூடிய பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்கும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகள், மாதிரி பள்ளிகளாக உருவெடுக்கும் நோக்கில் மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
ரூ 27,360 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அரசு நேரடியாக ரூ.18,128 கோடியை வழங்குகிறது. பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பதற்குத் தேவையான உபரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் போன்றவற்றை ஏற்படுத்த இந்த நிதி தொகுப்பு வழங்கப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு சுமார் ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து வருவதால் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு கண்டித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் 3 மொழிகள் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இரு மொழிக் கொள்கையை பின்பற்றி வரும் தமிழகம், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காது என முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 10-ம் தேதி மக்களவையில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழக அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது.
தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சினை செய்கிறார்கள். மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.
நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கை திட்டத்தின் கீழ் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சகம் இன்று மாநிலங்களவையில் உறுதிபட தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் கற்றுக்கொள்ளும் மொழிகளை மாநில அரசுகளும் மாணவர்களுமே தேர்வு செய்வார்கள் என்றும், இது நெகிழ்வுத்தன்மை மற்றும் சுயாட்சியை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...