Published : 19 Mar 2025 06:00 AM
Last Updated : 19 Mar 2025 06:00 AM

ரூ.281 கோடி சிஎஸ்ஆர் நிதி மோசடியில் 1,343 வழக்குகள் பதிவு: சட்டப்பேரவையில் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தி பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி ரூ.281 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 1,343 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர் கடந்த 2022-ல் சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பை தொடங்கினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியை பெற்று, பொதுமக்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டர், லேப்டாப் மற்றும் தையல் இயந்திரம் வழங்குவதாக உறுதி அளித்தார். இதை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர் அவரது தன்னார்வ அமைப்புகளில் பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர். ஆனால் அனைவருக்கும் ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றை வழங்காமல் பெரும் தொகையை அனந்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் மோசடி செய்தனர்.

கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்து மாநில சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

சிஎஸ்ஆர் நிதியின் பெயரில் நடந்த மோசடி தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 1,343 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 655 வழக்குகள் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் இதுவரை 386 வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக 49,386 பேரிடம் ரூ.281.43 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 16,438 பேருக்கு மட்டுமே ஸ்கூட்டர் தரப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தரப்படவில்லை.

இதுபோல் பாதி விலையில் லேப்டாப் தருவதாக 36,891 பேரிடம் ரூ.9.22 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் 29,897 பேருக்கு மட்டுமே லேப்டாப் தரப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தரப்படவில்லை.

இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளான சங்கத்தின் செயலாளர் அனந்து கிருஷ்ணன், தலைவர் அனந்த குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களின் 3 சொத்துகளை முடக்க நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சிஎஸ்ஆர் நிதி மட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்தும் தங்களுக்கு பணம் வருவதாக இவர்கள் கூறியுள்ளனர். பயனாளிகளை சேர்க்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் களப் பணியாளர்களை நியமித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக பிரபலங்களுடன் இவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon