Published : 19 Mar 2025 05:04 AM
Last Updated : 19 Mar 2025 05:04 AM
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் திருத்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2பி பிரிவில் ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்த பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு பாஜக ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த சட்ட திருத்த மசோதாவை கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், 'கர்நாடக பொது கொள்முதல் (திருத்தம்) மசோதா 2025' என்ற பெயரில் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''கர்நாடகாவில் சிறுபான்மையின மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் பின்தங்கியுள்ளனர். அந்த பிரிவினரிடையே வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளதால், 1999-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கர்நாடக பொது கொள்முதல் சட்டத்தை திருத்த தேவை எழுந்துள்ளது.
அதனால், அரசின் ஒப்பந்த பணிகளில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ. 2 கோடியிலான ஒப்பந்த பணிகள் அந்த பிரிவினருக்கு ஒதுக்க வழிவகை செய்யப்படும். இதன் மூலம் அந்த பிரிவினரிடையே நிலவும் வேலையின்மை, பொருளாதார பின்னடைவு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய முடியும்''என தெரிவித்தார்.
இந்த திருத்த சட்ட மசோதா மீது இன்று கர்நாடக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக எம்பியும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா, ''முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்து கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவந்துள்ளது. தேர்தல் அரசியலுக்காக காங்கிரஸ் போடும் நாடகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பாபாசாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒருபோதும் ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இதற்கு எதிராக பாஜக போராடும். உச்ச நீதிமன்றத்திலும் இதற்கு எதிராக வழக்கு தொடர்வோம். கர்நாடகாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம். கர்நாடக அரசின் சட்ட திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தோற்கடிப்போம்''என்றார்.
இதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ''கர்நாடக அரசின் முடிவை மத அடிப்படையில் அணுகக் கூடாது. சமூகத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு வழங்கப்படும் உரிமையாக அணுக வேண்டும். இந்த சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் மக்கள் மட்டும் பயனடைய மாட்டார்கள். கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரும், பிற்படுத்தப்பட்டவர்களும் பயனடைவார்கள்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment