Published : 18 Mar 2025 07:19 PM
Last Updated : 18 Mar 2025 07:19 PM

“இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி நெகிழ்ச்சி பகிர்வு

புதுடெல்லி: இளையராஜா எல்லா வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, சமீபத்தில் லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் நிகழ்த்தப்பட்ட மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியன்ட் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். இளையராஜாவின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, அவரை இசை மேதை என்றும், ஒரு முன்னோடி என்றும் பாராட்டினார்.

இளையராஜா உடனான தனது சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இசை மேதையும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தமது முதலாவது மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியான வேலியன்ட்டை அளித்ததன் மூலம் மீண்டும் வரலாறு படைத்தார்.

இந்த நிகழ்ச்சியுடன் உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு இருந்தது. இந்த முக்கியமான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - இது உலக அளவிலான சிறப்பைத் தொடர்ந்து அளிக்கிறது” என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா, "பிரதமர் நரேந்திர மோடியுடனான ஒரு மறக்கமுடியாத சந்திப்பு இது. எனது சிம்பொனி "வேலியண்ட்" உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டுக்கும், ஆதரவுக்கும் பணிகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x