Published : 18 Mar 2025 01:51 PM
Last Updated : 18 Mar 2025 01:51 PM

ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் மேற்குலக நாடுகள் இரட்டை நிலைப்பாடு: ஜெய்சங்கர் கண்டனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில், மேற்குலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன, மேலும் உண்மையில் படையெடுப்பு என்பதை வெறும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றியுள்ளன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், “நாம் அனைவரும் இன்று இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி பேசுகிறோம். இன்று இது முக்கியமான விஷயமாக உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் காஷ்மீரை நீண்ட காலமாக மற்றொரு நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இப்பிரச்சினையில், நாம் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றோம். ஆனால், அங்கு காஷ்மீர் மீதான படையெடுப்பு என்பது வெறும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களும், தாக்குதல் நடத்தியவர்களும் ஒரே மாதிரி அணுகப்பட்டனர்.

இன்று நாம் அரசியல் தலையீடு பற்றியும் பேசுகிறோம். மேற்குல நாடுகள் மற்ற நாடுகளின் பிரச்சினைகளில் தலையிட்டால் அது ஜனநாயக சுதந்திரங்களை பின்பற்றுவகதாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் பிற நாடுகள் மேற்கு உலகுக்குள் செல்லும் போது அது தீய நோக்கமாக பார்க்கப்படுகிறது. நமக்கு ஓர் ஒழுங்கு தேவை என்றால், அதற்கு நியாயமான அமைப்பு இருக்க வேண்டும், வலுவான ஐக்கிய நாடுகள் சபை இருக்க வேண்டும். ஆனால், வலுவான ஐ.நாவுக்கு நியாயமான ஐ.நா.சபை தேவை. ஒரு வலுவான சர்வதேச ஒழுங்கு, அடிப்படையில் சில தரநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள், தோஹா மாநாட்டின் போது தள்ளிவைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், தலிபான்கள் மிகவும் வெளிப்படையாக ஓஸ்லோவில் வரவேற்கப்பட்டனர். இன்றும் தலிபான்கள் சரியாக செயல்படவில்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் ஓஸ்லாவில் வரவேற்கப்பட்டது எதை உணர்த்துகிறது." என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டெல்லியில் மார்ச் 17 - 19 வரை நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் ‘அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்; இணைந்து இதனை நடத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x