Published : 18 Mar 2025 12:26 PM
Last Updated : 18 Mar 2025 12:26 PM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான 2 நாள் வழிகாட்டுதல் பயிற்சி திட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று (மார்ச் 18) தொடங்கிவைத்தார்.
டெல்லி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 24-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி இன்று தொடங்கி உள்ளது. டெல்லி சட்டமன்றம் இதற்கான ஏற்பாட்டை தொடங்கி உள்ளது. 2 நாள் பயிற்சி திட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா, துணை சபாநாயகர் மோகன் சிங் பிஸ்ட், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற நடைமுறைகள், நடத்தை விதிகள், சிறந்த நிர்வாக நடைமுறைகள் குறித்த அறிவை வழங்கும் நோக்கில் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சபாநாயகர் விஜேந்தர் குப்தா, “இந்த வழிகாட்டுதல் திட்டம் சட்டமன்ற உறுப்பினர்களின் சட்டமன்ற திறன்களை வலுப்படுத்த ஒரு முக்கிய முயற்சி. புதிய உறுப்பினர்கள் சபையின் விதி புத்தகத்தை, குறிப்பாக உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளைப் படிக்க வேண்டும். இந்த விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். சபையில் பேசுவதற்கு முன் சபாநாயகரின் அனுமதி அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடல் பிஹாரி வாஜய்பாயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசாங்கங்கள் வந்து போகும், ஆனால் நாடும் ஜனநாயகமும் நிலைத்திருக்க வேண்டும். டெல்லி சட்டமன்றத்தில் சபையைத் தவிர, ‘மினி-ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் குழுக்களும் உள்ளன. புதிய நிதியாண்டில் இந்த குழுக்கள் அமைக்கப்படும்.” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, “டெல்லி மக்கள் நமக்கு மிக முக்கிய பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இங்குள்ள ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. இந்த அவையை மதிப்பது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி, அவையின் அமைதியான செயல்பாடு மற்றும் விவாதங்களை உறுதி செய்வது ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும். புதிதாக கற்க வேண்டிய விஷயங்கள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் இது கவனம் செலுத்தும்.
டெல்லி மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நம்மை இங்கு அனுப்பியுள்ளனர். ஒவ்வொரு தருணமும் விலைமதிப்பற்றது, அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும். எங்கள் ஒரே குறிக்கோள் டெல்லியின் முன்னேற்றம். இன்று இருக்கும் நல்ல சூழல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் இதே மாதிரியாக இருக்க வேண்டும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் வளர்ச்சிப் பாதைக்கு அவசியம்.” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி, “இந்த அவையில் அமர்வது கண்ணியத்துக்கு உரியது மட்டுமல்ல, இது ஒரு பெரிய பொறுப்பும் கூட. நாங்கள் எந்தக் கட்சியின் பிரதிநிதிகளாகவும் அல்ல, மக்களின் பிரதிநிதிகளாக இங்கு அமர்ந்திருக்கிறோம்.” என்று கூறினார்.
திறமையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பது எப்படி, உறுப்பினர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, சட்டமன்றம் மற்றும் பட்ஜெட் செயல்முறை, கேள்விகள், நடைமுறைகள், நிர்வாக பொறுப்பு, நாடாளுமன்ற குழு அமைப்பு, நாடாளுமன்ற சலுகைகள், சுங்கம், மாநாடுகள், உறுப்பினர்களுக்கான தகவல் ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை குறித்து இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் விளக்கப்பட இருக்கிறது. டெல்லி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 24 முதல் 28 வரை நடைபெறும், மார்ச் 25 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...