Published : 18 Mar 2025 12:08 PM
Last Updated : 18 Mar 2025 12:08 PM
பாட்னா: ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிச் தலைவரும், பிஹாரின் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ், மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “76 வயதான லாலு, பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் வாக்குமூலங்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும். என்றாலும் லாலுவும் அவர்களின் குடும்பத்தினரும் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் எனக் தோன்றுகிறது” என்று தெரிவித்தனர்.
வேலைக்கு நிலம் லஞ்சமாக வாங்கிய வழக்கில்,லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினர் மீது கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில், லாலுவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களின் மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 2004 - 2009 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் (யுபிஏ -1) முதல் ஆட்சிக்காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வேயில், குரூப் டி மற்றும் கடைநிலைப்பணிகளில் வேலை வழங்குவதற்கு நிலத்தினை லஞ்சமாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற இருக்கிறது.
சிபிஐ-ன் வழக்குப்படி, வேலைக்கு விண்ணப்பித்தவர்கள், ரயில்வே வேலைக்காக நிலத்தினை லஞ்சமாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக முன்பு அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அமலாக்கத் துறை, சிபிஐ வழக்கின் அடிப்படையில் பணமோசடி வழக்கினை பதிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment