Published : 17 Mar 2025 07:11 PM
Last Updated : 17 Mar 2025 07:11 PM

‘கால்நடை போல பயணிகள்...’ - ரயில் பரிதாபங்களை பட்டியலிட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள்

புதுடெல்லி: கூட்ட நெரிசல், குறைவான வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக ரயில் பயணிகள் மிகவும் அவதிப்படுவதாகவும், இப்பிரச்சினைகளுக்கு ரயில்வே அமைச்சகம் தீர்வு காண வேண்டும் என்றும் மாநிலங்களவையில் எம்பிக்கள் வலியுறுத்தினர்.

ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாடு குறித்த விவாதம் மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சியின் உறுப்பினர் ஃபௌசியா கான், "ரயில்களில் மக்கள் ‘கால்நடைகளைப் போல’ பயணிக்கின்றனர். கூட்ட நெரிசல் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.

மகாராஷ்டிராவின் பர்பானி, நான்டெட், பீட், லத்தூர் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய இடங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் பயன்படுத்தும் முதல் ஏசி பெட்டிகளில் கூட கழிப்பறைகளில் தண்ணீர் தேங்குவது போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. முதல் வகுப்பு பெட்டியின் நிலையே இதுதான் எனும்போது, மற்ற பொது வகுப்புகளில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ரயில் கட்டணம் ஏழைகளுக்கு உகந்ததாக இருக்கவில்லை. எனவே, ரயில் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ராம்ஜி, "ரயில் பாதுகாப்பு கவலை அளிப்பதாக உள்ளது. உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் ரயில்கள் தடம் புரள்வதுதும், விபத்துக்கள் நேர்வதும் நடக்கின்றன. வந்தே பாரத் ரயில்கள் பாராட்டத்தக்கவை என்ற போதிலும், அவை ஏழை பயணிகளுக்கு ஏற்றதாக இல்லை. எனவே, குறைந்த கட்டணம் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

அதிக அளவிலான பயண காலங்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் சேர்க்கப்பட வேண்டும். உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூரில் இருந்து மும்பை மற்றும் டெல்லிக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்பி சர்ஃப்ராஸ் அகமது, "நாடாளுமன்ற நிலைக்குழுவின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சகம் பதிலளிப்பதே இல்லை. எந்த கேள்வி கேட்டாலும், அடுத்த கூட்டத்தில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்பதே பதிலாக வருகிறது. மேலும், அவுட்சோர்சிங் காரணமாக உணவு சேவைகள் மோசமடைந்துள்ளன. இது கவலை அளிக்கிறது" என குறிப்பிட்டார்.

பாரத் ராஷ்டிரய சமிதி கட்சியின் எம்பி ரவிச்சந்திர வத்திராஜு, "ஒன்பது மாநிலங்களோடு இணைக்கப்பட்ட ரயில் திட்டங்களுக்கான ரூ.32,000 கோடியில், தெலங்கானா "பெயரளவுக்கு" மட்டுமே பங்கை பெற்றுள்ளது. தெலங்கானா மாநிலத்துக்கென்று தனி திட்டங்கள் இல்லை. செகந்திராபாத் அருகே உள்ள காசிபேட்டையில் தனி ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டும். பத்ராசலத்திற்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

ரவிச்சந்திர வத்திராஜுவின் வாதத்தை எதிர்த்துப் பேசிய பாஜக எம்பி கே. லக்‌ஷமன், "பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தெலங்கானாவுக்கு ரூ.5,337 கோடி சாதனை பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 753 கி.மீ புதிய தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன. 1,096 கி.மீ மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐந்து வந்தே பாரத் ரயில்கள் மற்றும் ரூ.40,000 கோடி மதிப்பிலான 22 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேடக் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற போதிலும் அந்த தொகுதியில் ஒரு ரயில் நிலையத்தை கூட அவர் நிறுவவில்லை" என்று கூறினார். உபேந்திர குஷ்வாஹா, வன்லால்வேனா, மிஷன் ரஞ்சன் தாஸ் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x