Published : 17 Mar 2025 05:53 AM
Last Updated : 17 Mar 2025 05:53 AM

மறைமுக போரில் ஈடுபடுகிறது பாகிஸ்தான்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை. அந்த நாடு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த லெக்ஸ் பிரிட்மேன் (41), பிரபல கணினி விஞ்ஞானி ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை அவர் நேர்காணல் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தொழிலதிபர் எலான் மஸ்க், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளிட்டோரை லெக்ஸ் பிரிட்மேன் பேட்டி எடுத்துள்ளார்.

இந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது நேர்காணல் நேற்று சமூக வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவின் மத சம்பிரதாயங்கள், வாழ்வியல் கலை சார்ந்தது ஆகும். இந்து மதம் குறித்து எங்களது உச்ச நீதிமன்றம் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறது. அதாவது இந்து மதம் என்பது வழிபாடு மட்டும் கிடையாது. இது வாழ்வியல் கலை. உடல், மனம், ஆன்மாவை உச்ச நிலைக்கு கொண்டு செல்ல விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பசுக்களை பாதுகாக்க மகாத்மா காந்தி விரும்பினார். அதற்காக ஓர் இயக்கம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒருநாள் விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது நான் பள்ளி சிறுவன். பசுக்களின் பாதுகாப்புக்காக முதல்முறையாக விரதம் இருந்தேன். அப்போதுதான் முதல்முறையாக விரதத்தின் மகிமையை உணர்ந்தேன்.

பாகிஸ்தான் விவகாரம்: கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக பதவியேற்றேன். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு விடுத்தேன். இதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் என்னுடைய அமைதி முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை. அந்த நாடு மறைமுக போரில் ஈடுபடுகிறது. ஆனால் பாகிஸ்தான் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். தீவிரவாதம், உள்நாட்டு குழப்பங்களால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். நிச்சயம் ஒருநாள் பாகிஸ்தான், அமைதி பாதைக்கு திரும்பும்.

குஜராத் கலவரம்: கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத் கலவரம் நடைபெற்றது. அது துயரம் நிறைந்த சம்பவம் ஆகும். அந்த கலவரத்துக்கு பிறகு குஜராத்தில் கலவரம் நடைபெறவில்லை. மாநிலத்தில் நிரந்தரமாக அமைதி திரும்பி உள்ளது. கடந்த 2002-ம் ஆண்டுக்கு முன்பு குஜராத்தில் சுமார் 250 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 1969-ல் நடைபெற்ற கலவரம் 6 மாதங்கள் வரை நீடித்தது.

சீனா- இந்தியா உறவு: சீனா, இந்தியா இடையே சுமுக உறவு நீடிக்கிறது. இந்த உறவு வருங்காலத்தில் வலுவடையும் என்று நம்புகிறேன். இரு நாடுகளின் எல்லையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டுக்கு முந்தைய நிலையை கொண்டு வர இருதரப்பும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு ஆகும். இந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மோதல் நிலவவில்லை.

ட்ரம்ப்-மோடி நட்புறவு: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பங்கேற்றோம். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் எனது அழைப்பை ஏற்று விழா மேடையை சுற்றி வந்து பார்வையாளர்களை ட்ரம்ப் உற்சாகப்படுத்தினார். பாதுகாப்பு நடைமுறைகளை மீறி என்னோடு அவர் இணைந்து மேடையை சுற்றி வலம் வந்தார். அவர் மிகவும் துணிச்சலானவர். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது மீண்டும் ட்ரம்பின் துணிச்சலை பார்த்து வியந்தேன். அவர் என்னை நம்புகிறார். இருவருக்கும் இடையே ஆழமான நட்பு நீடிக்கிறது. எங்களது உறவை யாராலும் முறிக்க முடியாது.

ரஷ்யா-உக்ரைன் போர்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்கா-சீனா உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசல் உள்ளிட்டவை மிகுந்த கவலை அளிக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஓர் உண்மை அனைவருக்கும் புரிந்திருக்கும். எந்தவொரு நாடும் தனித்து செயல்பட முடியாது. ஒன்றை, ஒன்று சார்ந்தே வாழ முடியும். உலக அளவில் எழும் பதற்றங்களை தணிப்பதில் ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டதாக கருதுகிறேன்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்: எங்கள் கிராமத்தில் ஆர்எஸ்எஸ் கிளை செயல்பட்டது. அங்கு நாங்கள் ஒன்றாக அமர்ந்து தேசப்பக்தி பாடல்களை பாடுவோம். அப்போது முதலே ஆர்எஸ்எஸ் தொண்டராகிவிட்டேன். இப்போது உலகத்தின் மிகப் பெரிய அமைப்புகளில் ஒன்றாக ஆர்எஸ்எஸ் உருவெடுத்திருக்கிறது. விரைவில் 100-வது ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை கொண்டாட இருக்கிறோம். நாட்டுக்கு சேவையாற்றுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையாய பணி. மக்களுக்கு சேவையாற்றுவதை கடவுளுக்கு ஆற்றும் தொண்டாக நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x